உலகின் புகழ்பெற்ற கிளப் கால்பந்து தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் லிவர்பூல் அணியை வாங்க இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 


இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் ஜாம்பவான் அணிகளில் ஒன்றாக விளங்கும் லிவர்பூல் அணியின் தற்போதைய உரிமையாளரான ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG), அணியை விற்க முன்வந்துள்ளது.


கடந்த 2010ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்,  ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம் லிவர்பூல் அணியை வாங்கியுள்ளனர். தற்போது, இந்நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி வங்கி மூலம் அணியை விற்பதற்கு முயன்று வருவதாக தெரிகிறது. 


 






'The Mirror'நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, அணியை 4 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுக்கு விற்க FSG தயாராக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அம்பானி, உலகின் எட்டாவது பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. லிவர்பூல் அணியை வாங்குவது குறித்து அவர் விசாரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. 


ஆனால், இச்செய்தியை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து FSG வெளியிட்ட அறிக்கையில், "இபிஎல் கிளப்பில் உரிமை குறித்தும் இபிஎல் அணியின் உரிமையாளர்கள் மாற்றம் குறித்தும் பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.


அந்த வகையில், லிவர்பூல் அணியின் உடைமை குறித்தும் பல்வேறு தரப்பினர் கேட்டு வருகின்றனர். லிவர்பூலில் பங்குதாரர்களாக வர விரும்பும் மூன்றாம் தரப்பினருக்கு அணியை விற்க FSG ஆர்வம் காட்டி வருகிறது. 


சரியான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், ஒரு கிளப்பாக லிவர்பூலின் நலன்களுக்காக புதிய பங்குதாரர்களைக் கருத்தில் கொள்வோம் என்று முன்பே கூறியுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


லிவர்பூல் அணியை FSG வாங்கியதில் இருந்து மேலாளர் ஜுர்கன் க்ளோப்பின் கீழ் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வருகிறது. பிரீமியர் லீக் பட்டம், சாம்பியன்ஸ் லீக், FA கோப்பை, கராபோ கோப்பை மற்றும் ஐரோப்பிய சூப்பர் கோப்பையை அந்த அணி வென்றுள்ளது. வளைகுடா மற்றும் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த மூன்றாம் தரப்பினரும் அணியை வாங்கு முனைப்பு காட்டி வருகின்றனர்.


அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸைச் சொந்தமாக வைத்திருக்கிறது. மேலும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நிகழ்வையும் நடத்தி வருகிறது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) வணிகப் கூட்டாளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.