போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பாந்தாட்ட உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். கிளப் அணி மற்றும் போர்ச்சுகல் நாட்டிற்காக ஆயிரத்திற்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 800-க்கும் அதிகமான கோல்களை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தனியார் குளிர்பான பாட்டிலை எடுத்து ரொனால்டோ ஓரமாக வைத்ததன் மூலம், குறிப்பிட்ட நிறுவனம் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இந்த சம்பவம்  பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில், ரொனால்டோவால் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.


ஜுவெந்தாஸ் அணியில் இருந்து 2019ம் ஆண்டு விலகிய ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், வரும் 20ம் தேதி கத்தாரில் கால்பந்து உலக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக கிளப் போட்டிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டு, நட்சத்திர வீரர்கள் தத்தமது நாட்டிற்காக விளையாட கத்தாரில் முகாமிட்டுள்ளனர். 37 வயதான ரொனால்டோ பங்கேற்கும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது கருதப்படுகிறது. இதற்காக போர்ச்சுகல் அணி வீரர்கள் கத்தார் வந்து இறங்கியுள்ளனர். அங்கு வருவதற்கு முன்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ரொனால்டோ அளித்த பேட்டி தான், தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


அந்த பேட்டியில், மான்செஸ்டர் அணியின் மேனேஜர் எரிக் டென் ஹாக் மட்டுமின்றி, கிளப்பில் உள்ள மேலும் சிலரும் தன்னை அணியிலிருந்து வெளியேற்ற முயல்வதாக கூறினார். இதனால் தமக்கு துரோகம் நடப்பதாய் உணர்வதாகவும்,  கடந்த ஆண்டும் இதே மாதிரிதான் தமக்குத் தோன்றியதாகவும் ரொனால்டோ குறிப்பிட்டார்.


தமது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால்தான் கடந்த ஜூலையில் பயிற்சியில் சரியாக ஈடுபடவில்லை எனவும், அணி நிர்வாகம் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் கூறினார். தமக்கு மரியாதை கொடுக்காத டென் ஹாக்கைத் தாமும் மதிக்கப்போவதில்லை என ரொனால்டோ கூறினார். மான்செஸ்டர் யுனைடெட் அணி மீதான ரொனால்டோவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு, கால்பந்தாட்ட உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய நிலையில் தான் கத்தாரில் சந்தித்த சக மான்செஸ்டர் அணி வீரரான ப்ரூனோ பெர்னாண்டஸ், ரொனால்டோவிடம் முகம் கொடுத்தும் பேசாமல் சென்றுள்ளார்.






இதனிடையே,  தற்போது மெஸ்ஸி விளையாடி வரும் பி.எஸ்.ஜி. அணியில் ரொனால்டோ இணைய  வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. கால்பந்தட்டத்தின் பெரும் நட்சத்திரங்களான ரொனல்டோவும், மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக, வெளியான தகவல் ரசிகர்கள் இடையே ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


ஆனால், ரொனால்டோவை ஒப்பந்தம் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் பி.எஸ்.ஜி. அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் டிரேட் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை ஜனவரி மாதத்துடன் முடித்துக்கொண்டு, அவரை அணியிலிருந்து வெளியேற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.