கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர் கத்தாரில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் , குரூப் ஜி பிரிவில் செர்பியா மற்றும் கேமரூன் அணிகள் இடையேயான போட்டி சமனில் முடிந்தது, குரூப் H பிரிவில் நடந்த போட்டியில் தென் கொரியாவை, கானா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதைதொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஐந்து முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி, சுவிட்சார்லாந்தை எதிர்கொண்டது.
காயம் காரணமாக நெய்மர் விலகல்:
பிரேசில் அணி தனது முதல் போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை பந்தாடியது. இந்த போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாட வில்லை.
முதல் பாதியில் கோல் இல்லை:
ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் சரிசமமாக தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஆக்ரோஷமான ஆட்டத்தை காட்டிலும் தடுப்பு ஆட்டத்திலேயே இரு அணிகளும் கவனம் செலுத்தின. பிரேசில் அணி வீரர்கள் அடுத்தடுத்து பந்தை எதிரணியில் கோல் கம்பிற்கு அருகே கொண்டு சென்றாலும், அவர்களால் அதை கோலாக மாற்ற இயலவில்லை. அந்த தருணங்களில் அங்கு நெய்மர் இல்லாத வெற்றிடத்தை பார்வையாளர்களால் நன்றாகவே உணர முடிந்தது. இதே போன்று சுவிட்சர்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சியும், பிரேசில் அணி வீரர்களால் முறியடிக்கப்பட்டது. இறுதியில் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
இரண்டாது பாதி ஆட்டம்:
போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியதும் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக இறங்கினர். பந்து இரு அணிகளிடமும் அடுத்தடுத்து கால் மாறியது, இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்ட, முதல் கோல் அடிக்கப்போவது யார் என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. அதேநேரம் பிரேசில் ரசிகர்கள் இடையே பெரும் அமைதியும் நிலவியது. பிரேசில் அணி வீரர்கள் இரண்டு முறை பந்தை கோல் கம்பை நோக்கி உதைத்தாலும், எதிரணியின் கோல் கீப்பர் சோமர் அதனை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.
பிரேசில் வெற்றி:
இரு அணிகளும் கோல் அடிக்கப்போவதில்லை, போட்டி டிராவை தான் எட்டும் என இருதரப்பு ரசிகர்களும் கருதிய நிலையில், போட்டியின் 83வது நிமிடத்தில் பிரேசிலின் கேஸ்மிரோ தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அடுத்த கணம் சோர்ந்து கிடந்த மைதானம், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முழக்கத்தால் மீண்டும் புத்துயிர் பெற்றது. கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்படாலும் சுவிட்சர்லாந்து அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து பிரேசில் அணி தனது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டு வெற்றிகளின் மூலம், எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் பிரேசில் அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மேலும், அடுத்த சுற்றுக்கும் முனேறியுள்ளது.