FIFA World Cup 2022: கடந்த போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஏற்பட்ட காயத்தால், அவர் இந்த உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
பிரேசில் அணி தனது முதல் போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை பந்தாடியது. இந்த போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா இல்லையா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இன்று பிரேசில் அணி தான் இடம் பெற்றுள்ள குரூப் ஜி’யில் உள்ள மற்றொரு அணியான சுவிட்சர்லாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதவுள்ளது. இந்த போட்டியானது கத்தாரில் உள்ள 974 மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பிரேசில் அணிக்கு பிரேசில் நாட்டைக் கடந்து உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக வேறு எந்த அணிக்கும் இல்லாத பெருமையைக் கொண்டுள்ள கால்பந்து அணி என்றால் அது பிரேசில் தான். ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற அணி அது தான்.
நெய்மர் இனி இல்லை
பிரேசில் தனது முதல் போட்டியில் விளையாடும் போது, 80வது நிமிடத்தில் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. போட்டி இன்று இரவு நடக்கவுள்ள நிலையில் பிரேசில் அணியின் பயிற்சியாளர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நெய்மர் இல்லாமல் கோல் அடிப்பது எப்படி என்பதைப் பற்றி கூறினார். மேலும், நெய்மர் களமிறங்குவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் நேரடியான பதில் தரவில்லை. நெய்மர் இல்லை என்றாலும் எங்களால் கோல் அடிக்க முடியும்” என்றே பதில் அளித்துள்ளார். இன்னும் காயத்தில் இருந்து நெய்மர் மீளாத காரணத்தால் இன்றைய போட்டியில் நெய்மர் களமிறங்கமாட்டார் என தெரிகிறது. மேலும் காயம் தீவிரமாக இருந்தாலோ அல்லது அவர் குணமாவதில் காலதாமதமானாலலோ அவர் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்தே விலக நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2018 உலகக் கோப்பையில் சுவிட்சர்லாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடி பிரேசில் அணி 1 - 1 என்ற கோல் அடித்து போட்டியை டிராவாக்கி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நெய்மர், டிசம்பர் 3ஆம் தேதி பிரேசில் அணி கேமரூன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார். அதுவும் சுவிட்சர்லாந்து அணியுடனான போட்டியின் முடிவுகளைப் பொறுத்துதான் என பிரேசில் கால்பந்து என்ற டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.