FIFA Women World Cup 2023: மிகவும் பிரமாண்டமாக தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வரும் ஃபிஃபா மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இந்த தொடரின் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தொடரை நடத்திவரும் நாடுகளுள் ஒன்றான ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவும் நினைத்துக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப்போட்டது போல போட்டி முடிவுகள் அமைந்துவிட்டது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருந்தனர்.
போட்டி தொடங்கிய முதல் அரைமணி நேரம் இரு அணி வீராங்கனைகளும் மிகச் சிறப்பாக ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொள்ளும் அளவிற்கு ஆக்ரோஷமாக ஆடிக்கொண்டு இருந்தனர். இதனால் இரு அணிகளுக்கும் இடையில் எதாவது சம்பவம் நடக்குமோ என யோசிக்கும் அளவிற்கு போட்டி சென்றது. இங்கிலாந்து அணி தரப்பில் இருவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
போட்டியின் முதல் கோலை இங்கிலாந்து அணியின் எல்லா டூனி போட்டியின் 36-வது நிமிடத்தில் அடித்தார். இதனால் போட்டியில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது. ஆஸ்திரேலிய அணி தனது தரப்பில், ஒரு ஒரு கோலை மட்டும் அடித்தது. போட்டியின் 63வது நிமிடத்தில் சாம் கெர் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் லாரென் கெம்ப் போட்டியின் 71வது நிமிடத்திலும் அலீசியா ரஸ்ஸோ 86வது நிமிடத்திலும் கோல் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இறுதி வரை முயற்சி செய்த ஆஸ்திரேலிய அணியால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு 6 முறை கார்னர் ஷாட் அடுக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனால் ஒரு கோலுக்கு மேல் போடமுடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த அணி வரும் 20ஆம் தேதி இறுதிப் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக 3வது இடத்துக்கான போட்டியில் ஸ்வீடனும் ஆஸ்திரேலியாவும் 19ஆம் தேதி மோதிக்கொள்கின்றன. இரு அணிகளும் இந்த முறைதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இம்முறை கோப்பையை ஒரு புதிய அணி வெல்லப்போகிறது.