22ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கியுள்ளது.
மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் நான்காவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. டி, எஃப் மற்று இ ஆகிய பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெறுகின்றன.
பரபரப்பாக நடைபெற்ற முதல் ஆட்டத்தில், இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது.
இந்நிலையில், நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி, நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்த்து களம் கண்டது. கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
ஜப்பான் அணி தனது கடைசி 3 போட்டிகளில், ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. சர்வதேச தரவரிசைப்பட்டியலில் ஜெர்மனி 11வது இடத்திலும், ஜப்பான் 24வது இடத்திலும் உள்ளன. ஜப்பான் உடனான கடைசி 4 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத ஜெர்மனி அணி, 2 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கலீஃபா மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 06.30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே கோல் அடிக்கும் முனைப்பில் ஜெர்மனி ஆடியது.
அதன் பலனாக, 33ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார். அதன் பிறகும், ஜெர்மனி அணி வீரர்கள் பல முறை கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதனை ஜப்பான் அணி வீரர்கள் தடுத்தனர்.
போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியபோது, 75ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் ரிட்சு டோன் அடித்த கோல் ஜெர்மனி அணிக்கு பேரிடியாக அமைந்தது. இதையடுத்து, போட்டி ஜப்பானுக்கு சாதமாக மாற தொடங்கியது.
இறுதி கட்டத்தில், ஜப்பான் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 83ஆவது நிமிடத்தில் டகுமா ஆசானோ ஒரு கோலை அடித்து போட்டியின் போக்கையே மாற்றினார். இறுதியில், 1 - 2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயின் - கோஸ்டா ரிகோ:
அல் துமாமா மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில், ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிகோ அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன. சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்பெயின் அணி, கடைசி 10 போட்டிகளில் சந்தித்த முதல் தோல்வியுடன் இன்று மைதானத்தில் களம் இறங்க உள்ளது.
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறிய சூழலை, நடப்பாண்டில் மாற்றும் நோக்கில் கோஸ்டா ரிகோ அணி போட்டியில் விளையாட உள்ளது.
இரு அணிகளும் இதுவரை இருமுறை நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டியில், ஸ்பெயின் அணி தோல்வியை சந்திக்காமல் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. சர்வதேச புள்ளிப்பட்டியலில் ஸ்பெயின் அணி 7வது இடத்திலும், கோஸ்டா ரிகோ 31வது இடத்திலும் உள்ளன. இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.