Ravindra Jadeja Ruled Out: வங்க தேச ஒரு நாள் தொடரில் ஜடேஜா விலகல்... இளம் ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு...!
வங்க தேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஜடேஜா விலகி உள்ளார்.

இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட அவர் ஆடவில்லை. ஜடேஜா போன்ற முக்கிய வீரர் இல்லாமல் இந்தியா டி20 உலக கோப்பையை சந்தித்தது, அதற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதற்கு ஏற்றார்போல, உலக கோப்பை தொடரின் அரை இறுதியில், இங்கிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது.
இதை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆடியது. அதிலும், ஜடேஜா இடம்பெறவில்லை. ஆனால், சூர்யகுமார் யாதவின் அசத்தில் ஆட்டத்தால் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய, வங்க தேச அணிகள் மோத இருக்கின்றன.
இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. இந்திய அணியின் ஜடேஜா, வங்கதேச அணியுடனான தொடரில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அணியில் முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது.
அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ள நிலையில், மாற்ற வீரராக யார் அறிவிக்கப்படுவார் என்பது கேள்வியாக உள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி மிர்பூரில் தொடங்கும் ஒருநாள் தொடருக்கு ஜடேஜாவுக்கு பதிலாக மேற்கு வங்க ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.