கடந்த ஞாயிற்றுக் கிழமை, கத்தார் நாட்டில் 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என உலக கால்பந்து ரசிகர்களுக்கு இந்த முறையும் விருந்து படைத்து கொண்டிருக்கிறது உலகக் கோப்பை கால்பந்து. 


மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் நான்காவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. டி, எஃப் மற்றும் இ ஆகிய பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெறுகின்றன.


2018 FIFA உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவிய குரோஷியா, இந்த உலகக்கோப்பையில் தனது தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொண்டது. சர்வதேச அளவில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் பெற்ற வெற்றிகளுடன், மொராக்கோ அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது.


சர்வதேச தரவரிசைப்பட்டியில் குரோஷியா 12வது இடத்திலும், மொராக்கோ 22 இடத்திலும் உள்ளது. சர்வதேச போட்டியில், முதல் முறையாக இரு அணிகளும் எதிகொண்டன. சம பலத்துடன் உள்ள இரண்டு அணிகள் மோதிய இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு, அல் பேத் மைதானத்தில் நடைபெற்றது.


இரண்டு அணி வீரர்களும், கோல் அடிக்க பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இரு தரப்பு டிபன்ஸ் வீரர்களும் அதை சிறப்பாக தடுத்தி நிறுத்தினர். மொராக்கோ அணியின் ஹக்கிமிக்கு, கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர் தவறவிட்டார். இறுதி நேரத்தில் போட்டியில் அனல் பறந்தது.


பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் ஏதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியிலும், இரண்டு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தால் போட்டி சமனில் முடிந்தது.


கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாம் இடம் பிடித்த குரோஷியா, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இன்றைய போட்டியில், கோல் அடிக்காதது உலக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


இரண்டாம் போட்டி:


நான்கு முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி, நடப்பு தொடரில் தனது முதல் போட்டியில் ஜப்பானை எதிர்த்து களம் காண உள்ளது. கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே ஜெர்மன் அணி வெற்றி பெற்றுள்ளது.


ஜப்பான் அணி தனது கடைசி 3 போட்டிகளில், ஒரு, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. சர்வதேச தரவரிசைப்பட்டியலில் ஜெர்மன் 11வது இடத்திலும், ஜப்பான் 24வது இடத்திலும் உள்ளன. ஜப்பான் உடனான கடைசி 4 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத ஜெர்மன் அணி, 2 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. கலீஃபா மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 06.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.