எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்படும் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த 29ம் தேதி இரவு தனது 82வது வயதில் காலமானர். இதையடுத்து நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரேசில் அரசு அறிவித்தது. அதைதொடர்ந்து, அந்நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் பீலேவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆதர்ஷன நாயகனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களோடு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பான்டினியோவும் மரியாதை செலுத்தினர்.
ஃபிபா கோரிக்கை:
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கியானி, ”உலகம் முழுவதும் பீலேவை தெரியும், அவர் கால்பந்திற்காக என்ன செய்தார் என்பது தெரியும். கால்பந்தாட்டத்தை மக்களால் விரும்ப செய்தவர் பீலே. அவர் என்றுமே மறைவு இல்லாதவர். மிகுந்த உணர்ச்சியுடன், மிகுந்த சோகத்துடன் இங்கு இருக்கும் நாங்கள் ஒரு புன்னகையையும் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அதை வழங்கியவர் பீலே.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள், வருங்கால சந்ததியினர், பீலே யார் என்பதையும், உலகிற்கு அவர் அளித்த மகிழ்ச்சி யாது என்பதையும் அறிந்து நினைவில் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். 20, 30, 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு பிறகும், உலகில் எந்த நாட்டிலும் பீலே மைதானத்தில் கோல்கள் அடிக்கப்படும் போதும், மக்கள் அவர் யார் என்று கேட்பார்கள். அப்போது, பீலே ஒரு சிறந்த சிறந்த வீரர், அவர் நம் அனைவருக்கும் உற்சாகத்தை அளித்தவர் எனும் குரலை அவர்கள் கேட்பர். இதற்காக, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ள, 211 நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்கு பீலேவின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம்” என கியானி இன்பான்டினியோ தெரிவித்துள்ளார்.
இறுதி ஊர்வலம்:
பிரேசில் நேரப்படி 3ஆம் தேதி காலை பீலேவின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து, 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து பேரரசர் பீலேவை வழியனுப்பி வைக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு முத்து:
பிரேசிலின் வெற்றிக்காக முதல்முறையாக கோல் அடித்த போது பீலேவின் வயது வெறும் 16 மட்டுமே. அவரது 22 ஆண்டுகள் கால்பந்தாட்ட வரலாற்றில் மொத்தமாக 1283 கோல்கள் அடித்துள்ளார். மொத்தம் 92 முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர், உலகக்கோப்பையில் இளம் வயதில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர், இளம் வயதில் உலகக் கோப்பை வென்ற வீரர், மூன்று முறை உலக கோப்பையை வென்ற ஒரே வீரர்,பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர், உலகக்கோப்பை போட்டிகளில் அதிக கோல்களுக்கு (10) அசிஸ்ட் செய்தவர், என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான உலகின் மிகச்சிறந்த வீரராக கருதப்படும் பீலே கருப்பு முத்து என்றும் அழைக்கப்படுகிறார்.