டேலன்ட்வியூ அனாலிடிக்ஸ் நிறுவனம் சார்பில், சி.கே.எல் எனும் சென்னை கால்பந்து லீக் தொடர், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. மூன்றாவது சீசனாக நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்களில் 12 அணிகளும், மாணவிகளில் 6 அணிகளும் என மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியிலும் 15 பேர் இடம் பெற்றனர்.


மொத்தம் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு , “ரவுண்ட் ராபின்” முறையில் 24 போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசுபள்ளிகள் பங்கேற்றனர். இந்நிலையில், சென்னை கால்பந்து லீக் சீசன்-3ன் இறுதிப்போட்டி இன்று (அக்டோபர் 14) நடைபெற்றது.


கலக்கிய அரசு பள்ளி மாணவர்கள்:


இதில், ஆண்கள் பிரிவில் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சைதாப்பேட்டை, பெண்கள் பிரிவில் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. முன்னதாக, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பெருங்குகுடி அரசு மேல்நிலைப் பள்ளியும், துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியும் மோதின. இதில் 6-0 என்ற கோல் கணக்கில் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி வென்றது.


ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை 2 மற்றும் அண்ணாசாலையில் உள்ள மதராஸா ஆசம் அரசு மேல்நிலைப் பள்ளி இடையே நடைபெற்றது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சைதாப்பேட்டை அணி வென்றது.


ஒட்டுமொத்த லீக் போட்டிகளில் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாய் சந்தோஷ் 12 கோல்களும், துரைப்பாக்கம் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவி சுவேதா 9 கோல்கள் அடித்து சிறப்பு சேர்த்தனர்.


பரிசளிப்பு விழாவில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் பத்மஸ்ரீ சரத் கமல், ஏர் ரைபிள் ஜூனியர் உலக கோப்பை சாம்பியன் வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும் லேடன்ட் வியூ அனாலிடிக்ஸ் இணை நிறுவனர் பிரமத் ஜன்தியாலா ஆகியோர் பங்கேற்றனர்.


மேலும் படிக்க:IND Vs PAK: அகமதாபாத் மைதானம்.. ஒரு லட்சம் பார்வையாளர்கள், 11 ஆயிரம் பாதுகாவலர்கள்; இந்தியா-பாகிஸ்தான் போட்டி பற்றிய A to Z தகவல்கள்!


மேலும் படிக்க: ODI WC 2023 IND Vs PAK: நிரம்பி வழியும் நரேந்திர மோடி மைதானம்.. எங்கு பார்த்தாலும் நீலம் - ஆர்ப்பரிக்கும் இந்திய ரசிகர்கள்!