பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் நேற்று, சவுதி அரேபிய கால்பந்து கிளப்பான அல்-ஹிலா அணியில் இணைந்தார். இந்த சிறப்பான தகவலை சவுதி புரோ லீக் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் நெய்மர் ஜூனியர், பிரபல பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியில் விளையாடி வந்தார். இங்கு விளையாடியதற்காக இவருக்கு சுமார் 222 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது சவுதி அரேபியா அணியில் இணைந்த நெய்மருக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அணி நிர்வாகம் சுமார் (300 மில்லியன் யூரோ) 900 கோடி ரூபாய் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
வருகின்ற 2025 ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் அல்-ஹிலால் அணியுடான நெய்மரின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், அதன்பிறகு அவரது மதிப்பு 400 மில்லியன் யூரோக்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அல்-ஹிலால் அணியுடன் நெய்மர் இணைந்த முதல் நாளை நினைவு கூறும் வகையில், சிறப்பு வீடியோ வெளியிட்டு அணி நிர்வாகம் அவரை வரவேற்றது.
- 2017ம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் அணிக்காக விளையாட தொடங்கிய நெய்மர், அனைத்து போட்டிகளிலும் களமிறங்கி 30 போட்டிகளில் 28 கோல்களை அடித்தார்.
- பாரிஸ் செயிண்ட் அணிக்காக தனது நான்காவது சீசனில் சிறப்பாக செயல்பட்டு, உள்நாட்டு லீக்கில் 50 கோல்களை அதிவேகமாக கடந்த கால்பந்து வீரர் என்ற பெருமையை நெய்மர் படைத்தார்.
- நெய்மர் பிஎஸ்ஜி அணிக்காக இதுவரை 173 போட்டிகளில் விளையாடி 118 கோல்களை அடித்துள்ளார். மேலும், 13 கோப்பைகளை வென்ற அணியிலிம் இடம் பெற்றிருந்தார்.
- கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரீம் பென்சிமா, ரியாத் மஹ்ரெஸ் போன்ற பிரபல கால்பந்து வீரர்களுக்கு பிறகு, சவுதி அரேபியா அணிக்களுக்காக நெய்மர் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அணி மாற்றம் குறித்து பேசிய நெய்மர், “ நான் ஐரோப்பாவில் நிறைய போட்டிகளில் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளேன். அங்கு பல சிறப்பான தருணங்களும் எனக்கு உள்ளது. ஆனால், நான் எப்போதும் ஒரு உலகளாவிய வீரராக இருக்க விரும்புகிறேன். புதிய இடங்களில் புதிய சவால்கள், புதிய வாய்ப்புகள் எனக்கு எப்படி அமையும் என சோதிக்க போகிறேன். அதன் காரணமாகவே சவுதி அரேபியாவை தேர்ந்தெடுத்தேன். “ என்றார்.
அல் ஹிலால்:
அல்-ஹிலால் அணி சவுதி அரேபியா மற்றும் ஆசியாவை பொறுத்தவரை இதுவரை 66 கோப்பைகளை வென்றுள்ளது. மேலும், பிரீமியர் லீக்களில் 18 பட்டங்களையும், ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் 4 பட்டங்களையும் வென்றுள்ளது.