ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் விளையாடும் 22 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆசிய கால்பந்தாட்ட அணி


சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் விளையாடும் இந்திய கால்பந்து அணிக்கான வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக் தலைமை பயிற்சியின் கீழ் அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அணியில் குர்பிரீத் சிங் சந்து, குர்மீத் சிங், தீரஜ் சிங் மொய்ராங்தம், சந்தேஷ் ஜிங்கன், அன்வர் அலி, நரேந்தர் கேக்லாட், லால்சங்குங்கா, ஆகாஷ் மிஷ்ரா, ராஷன் சிங், ஆஷிஸ் ராய், ஜீக்சன் சிங், சுரேஷ் சிங், அபியா ரால்டே, அமர்ஜித் சிங் கியாம், ராகுல் கேபி, நேரோம் மகேஷ் சிங், சிவசக்தி நாராயணன், ரஹீம் அலி, அனிகிட் ஜாதவ், விக்ரம் பிரதாப் சிங், ரோகித் தாணு, சுனில் சேத்ரி ஆகியோர் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 


இதில் சிவசக்தி நாராயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஏழாம் வகுப்பு படித்தபோது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு கால்பந்தின் முத்திரை பதித்து வகிருகிறார். ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு அணிக்காக முன்கள வீரராக விளையாடி வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தியா-கிர்கிஸ்தான்- மியான்மர் நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இப்படியான நிலையில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான கால்பந்து அணியிலும் இடம் பெற்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


க்ரீன் சிக்னல் காட்டிய இந்தியா


முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு மட்டுமே  அனுமதி என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். ஆனால் தரவரிசையில் 18வது இடத்தில் இருக்கும் இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கும், 11வது இடத்தில் இருக்கும் பெண்கள் கால்பந்து அணிக்கும் ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. ஆனால் மத்திய விளையாட்டு அமைச்சகம் இதில் தலையிட்டதால் அனுமதி கிடைத்தது. 


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது நாட்டின் கால்பந்து அணிகளான ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் பங்கேற்க உள்ளது. இரு அணிகளும் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். 


கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆண்கள் தேசிய கால்பந்து அணிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.