2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி, சீன கால்பந்து அணியிடம் 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி சீனாவுக்கு எதிராக ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இவ்விரு அணிகளுக்கிடையேயான இந்த ஆட்டம் ஹாங்சோவில் உள்ள ஹுவாங்லாங் ஸ்போர்ட்ஸ் சென்டர் மைதானத்தில் நடைபெற்றது. 


சீனா சார்பில் கியாங்லாங் தாவோ 2 கோல்களையும், காவ் தியான்யி, வெய்ஜுன் டாய், ஹாவ் ஃபாங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்தியா சார்பில் ராகுல் கேபி ஒரே ஒரு கோலை அடித்தார்.


இன்றைய போட்டியில் என்ன நடந்தது..?


ஆரம்பத்தில் இருந்தே சீன அணி, இந்திய அணி மீது தாக்குதலை தொடுக்க தொடங்கியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் சீனா முதல் கோலைப் போட்டது. இந்த முதல் கோலை தியானி கோல் அடித்து கணக்கை தொடங்கினார். சீனாவின் முதல் கோலுக்கு இந்தியாவின் ராகுல் கேபி சிறப்பான கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் இந்திய அணிக்காக முதல் கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் பாதியில் இந்தியாவும் சீனாவும் 1-1 என சமநிலையில் இருந்தன. 


சீனா கோல் அடிக்க.. அடிக்க..


இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், அதாவது 51வது நிமிடத்தில், இரண்டாவது கோலை சீனா அடித்தது. சீனாவின் இரண்டாவது கோலை டாய் வெய்ஜுன் அடித்தார். இந்த கோலின் மூலம் சீனா 2-1 என முன்னிலை பெற்றது. போட்டியில் பின்தங்கியிருந்தாலும், சுனில் சேத்ரியின் இந்திய அணியால் சீனாவைத் தடுக்க முடியவில்லை. 72வது நிமிடத்தில் சீனாவுக்காக தாவோ கியாங்லாங் மூன்றாவது கோலை அடித்து அணியை 3-1 என முன்னிலை பெற்றார். பின்னர் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, போட்டியின் 75வது நிமிடத்தில், தாவோ கியாங்லாங் தனது இரண்டாவது கோலையும், சீனாவுக்காக நான்காவது கோலையும் அடித்தார். 


பிபா தரவரிசையில் 80வது இடத்தில் இருக்கும் சீன அணி 4 கோல்கள் அடித்த பிறகும் நிற்கவில்லை. ஆட்டத்தின் முடிவில் சீனாவின் ஹாவ் ஃபாங், அந்த அணிக்கு 5வது கோலை அடித்து, ஃபிஃபா தரவரிசையில் 99வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு 5-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. 






முன்னதாக, இரு அணிகளும் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் சந்தித்துள்ளன. சீனாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு இந்திய அணி, வருகின்ற வியாழக்கிழமை வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மியான்மருக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் மோதுகிறது.