ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட லூயிஸ் ரூபியால்ஸ் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  கடந்த மாதம் நடைபெற்ற 2023 மகளிர் FIFA உலகக் கோப்பையில் வீராங்கனை ஒருவரின் உதட்டில் 'முத்தம்' கொடுத்த சர்ச்சையில் லூயிஸ் ரூபியால்ஸ் சிக்கினார். அன்று முதல் அவரது பெயர் தலைப்பு செய்திகளாக இருந்து வருகிறது. பலரும் லூயிஸ் ரூபியால்ஸ் தனது பதவியிலிருந்து பதவி விலக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், தற்போது இப்போது லூயிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக எக்ஸ் ( ட்விட்டர்) மூலம் தெரிவித்தார். 


முழு விஷயம் என்ன?


2023 மகளிர் FIFA உலகக் கோப்பையில், ஸ்பெயின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, ஸ்பெயினின் நட்சத்திரப் பெண் கால்பந்தாட்ட வீராங்கனையான ஜென்னி ஹெர்மோசோவின் உதடுகளில் லூயிஸ் ரூபியேல்ஸ் அவரது அனுமதியின்றி விருது வழங்கும் விழாவில் முத்தமிட்டார். போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்த சம்பவம் நடந்தது. இது அப்போதே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த சர்ச்சைக்கு பிறகு விளக்கமளித்த லூயிஸ், ”என்னை மீறி ஒரு உணர்ச்சி வசத்தில் முத்தமிட்டு விட்டேன். இது தவறுதான், இதற்காக நான் மன்னிப்பும் கேட்டு விடுகிறேன். ஆனால், தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது” என்று தெரிவித்தார். 






இந்த முத்தத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் இவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து தான் வகித்து வந்த ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில், நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் இடைக்காலத் தலைவர் பெட்ரோ ரோச்சாவிடம் லூயிஸ் ரூபியால்ஸ் தெரிவித்தார். லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஆகஸ்ட் 26 அன்று, பெட்ரோ ரோச்சா ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவரானார். ரூபியால்ஸ் ஸ்பெயின் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் ஆவார். இவர் கடந்த 2018 முதல் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ருபியேல்ஸ் ட்விட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து தான் ராஜினாமா செய்யப் போவதாக தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொகுப்பாளருக்குப் பதிலளித்த லூயிஸ் ரூபியேல்ஸ், "நான் ராஜினாமா செய்கிறேன், என்னால் எனது வேலையைத் தொடர முடியாது" என்று கூறினார்.