2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன கால்பந்து அணி இந்திய கால்பந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.


போட்டி தொடங்கியது முதலே சீன அணி, இந்திய அணி மீது தாக்குதலை தொடுக்க தொடங்கியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் சீனா அதிரடியாக முதல் கோலை போட்டது. இந்த கோலை சீனாவின் வீரர் தியானி அடித்தார். இந்த கோலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வீரர் ராகுல் கேபி ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் பாதியில் இந்தியாவும் சீனாவும் 1-1 என சமநிலையில் இருந்தன. 


இதனால் உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள் ஸ்டேடியத்தில் ஆராவாரம் செய்து இந்திய கால்பந்து அணியினரை உற்சாகம் செய்தனர். இதிலும், ஒரு ரசிகர்கள் அதற்கும் மேலாக தான் கொண்டு வந்திருந்த இந்திய தேசிய கொடியை தூக்கிபிடித்து இங்கும் அங்கும் அசையும்படி ’இந்தியா’ ‘இந்தியா’ என்று குரலெழுப்பி தனது தேசிய உணர்வை வெளிப்படுத்தினார். அப்போது, அங்கிருந்த ஸ்டேடியம் உதவியாளர் ஒருவர், அந்த இந்திய ரசிகரிடம் வந்து உட்கார சொன்னார். இதனை ஏற்றுகொள்ளாத அந்த ரசிகர் ஏன் இவ்வாறு செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி தொடர்ந்து கொண்டாட்டாத்தில் ஈடுபட்டார். 


இதை வீடியோவாக பதிவிட்டு கண்டித்த இந்திய ரசிகர் தனது பதிவில், “இது மிகவும் கவலைக்குரியது, ராகுலின் கோலைக் கொண்டாடும் போது, தேசியக் கொடியை அசைத்துக்கொண்டிருந்த இந்திய ரசிகரை சீன அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தியதை நாம் அனைவரும் பார்த்தோம். துணிச்சலான ரசிகர் இன்னும் தேசத்தின் பெருமையை உயர்வாக வைத்திருந்தார். சீன அதிகாரிகளின் இந்த நடத்தையை நாங்கள் கண்டிக்கிறோம்.” என பதிவிட்டு இருந்தார். 






இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி 51வது நிமிடத்திலேயே இரண்டாவது கோலை சீன அணி அடித்து அசத்தியது. இந்த இரண்டாவது கோலை டாய் வெய்ஜுன் அடித்தார். இந்த கோலின் மூலம் சீனா தொடர்ந்து 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ச்சியாக, 72வது நிமிடத்தில் சீனாவுக்காக தாவோ கியாங்லாங் மூன்றாவது கோலை அடித்து அணியை 3-1 என முன்னிலை பெற செய்ய, மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, போட்டியின் 75வது நிமிடத்தில், தாவோ கியாங்லாங் தனது இரண்டாவது கோலையும், சீனாவுக்காக நான்காவது கோலையும் அடித்து அசத்தினார். 



போட்டி முடியும் நேரத்தில் சீனாவின் ஹாவ் ஃபாங், அந்த அணிக்கு 5வது கோலை அடித்து, ஃபிஃபா தரவரிசையில் 99வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு 5-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. இந்தியா இப்போது இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் வங்கதேசம் மற்றும் மியான்மரை வீழ்த்த வேண்டும். மற்றொரு ஆட்டத்தில் மியான்மர் வங்கதேசத்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.