அர்ஜெண்டினா அணியின் தலை சிறந்த வீரரும், உலகக் கோப்பையை வென்ற கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி இரண்டு வாரங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 


பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, அனுமதியின்றி சவுதி அரேபியா சென்றதால் இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாக பிரெஞ்சு விளையாட்டு நாளிதழான L'Equipe-ல் நேற்று தெரிவித்துள்ளது. 


இதையடுத்து, லியோனல் மெஸ்ஸி பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி வீரர்களோடு விளையாடவோ அல்லது பயிற்சி பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது இடைநீக்கத்தின்போது மெஸ்ஸியின் ஊதியமும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இடைநீக்கம் காரணமாக வருகின்ற ட்ராய்ஸ் மற்றும் அஜாசியோவுக்கு எதிரான லீக் 1 போட்டிகளில் மெஸ்ஸி விளையாடமாட்டார். இரண்டு வார தடைக்கு பிறகு, மே 21 அன்று ஆக்ஸெர் கிளப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மெஸ்ஸி மீண்டும் களமிறங்கலாம்.


என்ன நடந்தது? 


கடந்த ஞாயிற்றுக்கிழமை  PSG அணியும் Lorient அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் PSG அணி 3-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 


இந்த போட்டிக்கு பிறகு மெஸ்ஸி சவுதி அரேபியாவின் சுற்றுலா துறையுடன் செய்த ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டிற்கு சென்றார். இதன் காரணமாக கடந்த மே 1 ம் தேதி நடைபெற்ற அணியின் பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து, தகவல் தெரிவிக்காமல் பயணம் மேற்கொண்டதால் அணி நிர்வாகம் அவரை 2 வாரங்கள் இடைநீக்கம் செய்தது. 


PSG அணியுடனான லியோனல் மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது. இந்த சூழலில் மெஸ்ஸி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், அவர் ஒப்பந்தை நீட்டிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் யோசிக்கலாம். 


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்சிலோனாவில் இருந்து PSG அணியில் இணைந்தார். அடுத்து அவர் எந்த  கிளப்பில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே உச்சம் தொடுகிறது. 


லீக் 1 தொடரில் தற்போது பிஎஸ்ஜி அணி 33 போட்டிகளில் விளையாடி 75 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.