22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகல கொண்டாட்டத்துடன் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்தப் போட்டியை கண்டு ரசித்து கொண்டாடுவதற்கு கேரளாவில் ரூ.23 லட்சம் மதிப்பிலான வீட்டை 17 ரசிகர்கள் சேர்ந்து வாங்கியுள்ள செய்தி அந்த மாநிலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.


ரசிகர்கள் வாங்கிய வீடு:


இந்தியாவில் கால்பந்துக்கு கேரளா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் ரசிகர்கள் மிக அதிகம்.
இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த 17 ரசிகர்கள் ஒன்றிணைந்து ரூ.23 லட்சம் மதிப்பிலான வீடுடன் இணைந்து சொத்தை விலைக்கு வாங்கியுள்ளனர்.


அந்த வீட்டில் சுவரில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் மார்பளவு ஓவியங்களை வரைந்துள்ளனர். கொச்சி மாவட்டம், முண்டக்காமுகல் எனும் கிராமத்தைச் சேர்ந்த 17 ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இந்த சொத்தை வாங்கியுள்ளனர்.


இந்த வீட்டைச் சுற்றில் போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளின் தேசியக் கொடிகளை பறக்க விட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், பிரேசில், அர்ஜென்டீனா, போர்ச்சுகல் அணிகளின் ஜெர்ஸி வண்ணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வீட்டிற்கு பெயிண்ட் செய்துள்ளனர்.






முன்னணி நட்சத்திர வீரர்களுக்கு கட் அவுட் போஸ்டரையும் வைத்துள்ளனர்.அத்துடன், மிகப் பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சியையும் அவர்கள் பொருத்தி போட்டிகளை காண ஆர்வமுடன் தயாராகி விட்டனர்.


அந்த ரசிகர்களில் ஒருவர் கூறுகையில், "நாங்கள் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண ஸ்பெஷலாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோதித்தோம். அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை உதித்தது. மிகப் பெரிய திரையைக் கொண்ட டிவியில் நாங்கள் 17 பேரும் ஒன்று சேர்ந்து இந்த வீட்டில் அமர்ந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கண்டு ரசிக்க உள்ளோம்" என்கிறார் மகிழ்ச்சி பொங்க.


FIFA World Cup: உலககோப்பை கால்பந்து திருவிழா: சிறப்பு டூடுல் கேம் வெளியிட்ட கூகுள்...!


உலகக் கோப்பை கால்பந்து போட்டி குறித்து தெரிஞ்சிகோங்க..!
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.
கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.





இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.






8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.