ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பையை தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்களை குவித்தார்.
டிம் சவுதி ஹாட்ரிக் விக்கெட்:
ஒரு கட்டத்தில் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஓவரை வீசிய டிம் சவுதி சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச டி-20 போட்டிகளில் தனது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். சவுதி வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் கேப்டன் பாண்டியா, நீஷமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். அதற்கடுத்து வந்த தீபக் ஹூடா பெர்குசனிடமும், வாஷிங்டன் சுந்தர் நீஷமிடமும் கேட்ச் கொடுத்து, அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மலிங்கா சாதனையை சமன் செய்த சவுதி:
சவுதி வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததை தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிராக டி-20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக, இலங்கை வீரார் திசாரா பெரேரா மட்டுமே இந்திய அணிக்கு எதிராக, டி-20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்து இருந்தார்.
அதோடு சர்வதேச டி-20 போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில், மலிங்காவை தொடர்ந்து டிம் சவுதியும் இடம்பெற்றுள்ளார். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக மலிங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ள நிலையில், முதலாவதாக பாகிஸ்தானுக்கு எதிராகவும், தற்போது இந்தியாவுக்கும் எதிராகவும், டிம் சவுதி ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
இந்தியா வெற்றி:
இதனிடையே, இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 18.5 ஓவரில் வெறும் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதோடு, தொடரில் 1-0 என முன்னிலையும் வகிக்கிறது. அதிகபட்சமாக இந்தியா சார்பில், தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.