மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி தன்னுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்தியா-சீனா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் சீனா அசத்தலாக ஒரு கோல் அடித்தது. இதன்காரணமாக சீனா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. அடுத்து ஆட்டத்தின் 3வது கால்பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனை வந்தனா கடாரியா சூப்பராக கோல் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
நான்காவது கால்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. ஆகவே 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி சீனாவை தோற்கடிக்கவில்லை என்ற வரலாறு தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்பாக உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி இந்தியா-சீனா 2 முறை மோதியுள்ளன. அந்த இரண்டு முறையும் சீனா வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணி அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை வரும் 7ஆம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்திய அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று போட்டிக்கு செல்ல முடியும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்