FIFA WORLDCUP 2022: 22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் களமிறங்கி, லீக் போட்டிகள், நாக் - அவுட் சுற்று, கால் இறுதி சுற்றுகளைக் கடந்து போட்டித் தொடரானது அரை இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனும் இரண்டு முறை உலகக்கோப்பை பட்டம் வென்ற பிரான்ஸ் அணியும்,  உலகக்கோப்பையை கால்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆப்ரிக்க அணியான மொரோக்கோ அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 


இரு அணியின் ரசிகர்களும் போட்டி நடந்த ஆல் பையட் மைதானத்தில் நிரம்பியிருந்த நிலையில் போட்டி பரபரப்பாக தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பெரும்பாலும் பலர் எதிர் பார்த்ததைப் போல் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. போட்டியின் 5வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் தியோ கெர்னாண்டஸ் அந்தரத்தில் பறந்தபடி முதல் கோலினை அடிக்க, போட்டியில் பரபரப்பு மேலும் எகிறியது. அதன் பின்னர், நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு சவால் கொடுக்கும் வகையில் மொரோக்கோ அணியினர் தொடர்ந்து விளையாடிவந்தனர். முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் எதுவும் போடப்படவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.


போட்டியின் இரண்டாவது பாதியில்  79வது நிமிடத்தில் எம்பாப்வே பந்தை அசிஸ்ட் செய்ய அதனை, கோல் போஸ்டிடம் நின்றிருந்த ரந்தல் கோலோ முவானி கோலாக மாற்றினார். இந்த இரண்டாவது கோல் மூலம் பிரான்ஸ் அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை உறுதி செய்தது. அதன் பின்னர்  எக்ஸ்ட்ரா டைமிலும் எந்தவிதமான கோலும் போடப்படாததால், பிரான்ஸ் அணி போட்டியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது மட்டும் இல்லாமல், மீண்டும் ஒருமுறை, அதாவது நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 


போட்டியில் பிரான்ஸ் அணி 14 முறை  பந்தை கோல் போஸ்டிடம் கொண்டு சென்றனர், அதேபோல், மொரோக்கோ அணி 13 முறை பந்தை கோல் போஸ்டிடம் கொண்டு சென்றனர். இந்த போட்டியில் அதிக முறை பாஸ் செய்ததும் மொரோக்கோ அணிதான், அந்த அணி மொத்தம் 572 பாஸ்கள் செய்துள்ளது. பிரான்ஸ் அணி 364 முறை மட்டுமே பந்தை பாஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு, காத்திருப்பது மேஜிகல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் மீண்டும் ஒரு சுவாரஸ்யமான இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்,18) இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் கத்தாரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக மூன்றாவது இடத்துக்கான போட்டி சனிக்கிழமை (டிசம்பர்,17) நடைபெறவுள்ளது. அதில் குரோஷிய அணியும் மொரோக்கோ அணியும் மோதவுள்ளன.