ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 9ம் தேதி நடந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.
இதையடுத்து, கடந்த 11ம் தேதி நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டு அதில் இந்தியா வென்றது.
இந்நிலையில், மூன்றாவது டி20 ஆட்டம் அதே மும்பையில் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் நடந்தது.
இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கேப்டன் ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.
கேப்டன் ஹீலி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, பெர்ரி மட்டும் 75 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக கிரேஸ் ஹாரிஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இந்திய அணி சார்பில் ரேணுகா சிங், அஞ்சலி சர்வானி, தீப்தி சர்மா, தேவிகா வைத்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சுருட்டினர்.
173 ரன்கள் இலக்கு
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய மகளிர் அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா மட்டும் அரை சதம் விளாசினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பிற வீராங்கனைகள் பெரிதாக சோபிக்கவில்லை. இவ்வாறாக இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஷ்லீக் கார்ட்னர், டார்சி பிரவுன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை ஆஸி., தரப்பில் வீழ்த்தினர். ஆட்டநாயகி விருதுக்கு பெர்ரி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4வது டி20 ஆட்டம் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது.