FIFA WORLDCUP 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது இடத்துக்கான போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 


உலகக்கோப்பை கால்பந்து:


ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2022,  இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டது. பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் போட்டி நாளை லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினா ஜெர்சியை லியோனல் மெஸ்ஸி கடைசியாக அணியப்போகிறார்.


உலகக் கோப்பையை வெல்வதற்கு மெஸ்ஸிக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு இதுதான். எல்லா விருதுகளும் கோப்பைகளும் குவித்து விட்ட அவருக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ள இதனை பூர்த்தி செய்து உச்சகட்ட மகிழ்வுடன் விடை பெறுவார் என்று உலக கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் இப்படியான எதிர்பார்ப்பு ஒருபுறம் எகிறிக்கொண்டு இருக்க மூன்றாவது இடத்துக்கான போட்டி இன்று நடைபெறவுள்ளது. 


மூன்றாவது இடம் யாருக்கு?


இந்த போட்டியில், குரூப் எஃப்-இல் இடம் பெற்ற அணிகளான குரோஷியவும் மொரோக்கோவும் மோதவுள்ளன என்பது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இதில் லீக் போட்டியில் மொரோக்கோ அணியும் குரோஷிய அணியும் மோதியதில், இரு அணிகளும் கோல் எடுக்காததால் போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல், அரையிறுதி ஆட்டம் வரை மொரோக்கோ அணி தோல்வியை சந்தித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் அந்த அணி லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் வென்றும், ஒரு போட்டியில் டிராவும் ஆகியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் மொரோக்கோ அணி போர்ச்சுகலை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆப்ரிக்க அணிகளில் ஒரு அணி அரையிறுதி போட்டிவரை வந்திருப்பது கால்பந்து வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். 






அதேபோல் குரோஷிய அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டியில் டிராவும் செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி ஆட்டத்தில் இந்த அணி பலமான பிரேசில் அணியை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. 


ரசிகர்கள் எதிர்பார்ப்பு:


இரு அணிகளும் அரையிறுதி ஆட்டம் வரை சென்று தங்களது பலத்தினை ஏற்கனவே உலகிற்கு பறைசாற்றியுள்ளது. ஆனால், இரு அணிகளில் எந்த அணி மூன்றாவது இடத்தினை பிடிக்கப்போகிறது என்பதற்கான போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு கலிஃபா சர்வதேச மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில், குரோஷிய அணிக்கே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த முறை இரண்டாவது இடம் பிடித்த குரோஷிய அணி இம்முறை மூன்றாவது இடத்துக்கு முழுமயாக போராடும் எனலாம். ஆனால், மொரோக்கோ அணி தன்னுடைய முழு பலத்தினை வெளிப்படுத்தி மூன்றாவது இடத்தில் தன்னை நிலைநிறுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.