கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதியில் தலைமுறை தலைமுறையாக வெற்றிலை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பீடா தயாரிக்க பல்வேறு முக்கிய பெருநகரங்களுக்கு இங்கிருந்து தான் வெற்றிலை ஏற்றுமதி ஆகி வருவது சிறப்பாகும். தாம்பூலத்திற்கு சிறந்தது வெற்றிலையாகும். மருத்துவம் குணம் கொண்ட வெற்றிலை சாகுபடி கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தலைமுறை தலைமுறையாக நடந்து வருகின்றது. கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு உட்பட்ட மாயனூர், திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி, சித்தலவாய், கம்மநல்லூர், மகாதானபுரம், சிந்தலவாடி, லாலாபேட்டை உட்பட சுற்று வட்டார பகுதிகளில் 2000 ஏக்கர் அளவில் இன்றும் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. எந்த திசை பார்த்தாலும் காவிரி நீர் பாய்ந்து செழி செழித்து வளர்ந்து, பச்சை கம்பளம் பிரித்தார் போல வெற்றிலை கொடிக்கால் தோட்டங்களை பார்ப்பதற்கே இனிமையாக இருக்கும். வெற்றிலை சாகுபடியால் தினமும் 500க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்களுக்கும் தினசரி வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.




 


வெற்றிலை கொடிக்கால் நடவு செய்வதற்கு சீர்படுத்தப்பட்ட விவசாய நிலத்தில் அவுத்துவிதை நட்டு, வளர்ந்த பிறகு அதன் அருகில் வெற்றிலை கொடி நட்டு ஆறு மாதம் கழித்து நெடுநெடு என வளர்ந்து வெற்றிலை பருவகாலம் வரை தொடங்கும். வெற்றிலைக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுவதோடு நடுநிலையான சீதோசனம் இருந்தால் வெற்றிலை உற்பத்தி அதிகமாக இருக்கும். தமிழர் பண்பாட்டில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தாம்பூலத்தில் வெற்றிலை இருந்தால் தான் சிறப்பு பெரும். சாதாரண வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை என வெற்றிலை மூன்று வகைகள் உள்ளன. வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு சளி பிடித்தால் முருங்கை இலையோடு, வெற்றிலை, உப்பு சேர்த்து சாறு எடுத்து ஒரு சங்கு ஊற்றினால் போதும் சளி நீங்கிவிடும். சாப்பிட்ட உடன் வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்த்து போட்டால் உடனே செரிமானம் ஆகிவிடும்.


 




 


வெறும் வாயில் வெற்றிலை மென்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கும். தொடர்ந்து தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் குடல் புண்வாய், புண்கள் ஆறிவிடும். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் வெற்றிலையை அரைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு வெற்றிலையை வைத்து தேய்த்தால் போதும் முகப்பரு போய்விடும். உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் அடித்தால் தண்ணீரில் வெற்றிலையை போட்டு காயவைத்து சுடு தண்ணீராக குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும். குழந்தை பெற்ற தாய்மார்கள் வெற்றிலை தின்றால் பால் அதிகமாக சுரக்கும். வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சங்க கால நூல்களான பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் உட்பட பல்வேறு நூல்களில் வெற்றிலையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. வெற்றிலையில் நீர்ச்சத்து 3.1%, புரதசத்து 0.8%, கொழுப்பு சத்தும் அடங்கியுள்ளது.


 





 


மேலும் கால்சியம், கரோட்டின், தயமின்ரிபோ, பிளேவின் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது. உற்பத்தி செய்து ஆறு மாதம் கழித்து அன்றாடம் பணம் பார்க்கும் விலை பொருள் என்றால் அது வெற்றிலை. கரூர் மாவட்டத்திலிருந்து தினந்தோறும் வெற்றிலை பீடா மற்றும் முக்கியமாக கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு வெற்றிலை அதிக அளவு ஏற்றுமதி ஆகிறது. இங்கிருந்து கர்நாடகா, மும்பை போன்ற வெளிமாநிலத்திற்கும் நாகை, திருவாரூர், திருச்சி, வேலூர், திருப்பூர், கோவை போன்ற வெளி மாவட்டத்திற்கும் வெற்றிலை ஏற்றுமதி ஆகிறது. கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் வெற்றிலை சாகுபடி நடந்து வருவதோடு, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதி ஆவது சிறப்பாகும். வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு சேர்த்து வென்று தின்றால் வாய் சிவப்பாவது போல வெற்றிலையை நாம் பயன்படுத்தினால் வாழ்க்கையும் சிறக்கும் என்பது பெரியோர்களின் கூற்றாகும்.