கத்தார் நாட்டில் வரும் 20-ந் தேதி உலககோப்பை கால்பந்து போட்டித் தொடர் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடரை கண்டுகளிக்க கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
உலககோப்பை கால்பந்து மகுடத்தை அதிக முறை கைப்பற்றிய அணியாக பிரேசில் திகழ்கிறது. உலககோப்பை கால்பந்தை 1958-ஆம் ஆண்டு, 1962ம் ஆண்டு, 1970ம் ஆண்டு, 1994ம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டுகளில் என 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஜாம்பவனாக திகழ்கிறது.
உலகக் கோப்பைத் தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம். உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்தவர் யார்? 1930 இல் உலகக் கோப்பை போட்டி தொடங்கியதில் இருந்து, ஆடவருக்கான FIFA உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல் இதோ..
16 கோல்கள்
உலகக் கோப்பை தொடரில் 16 கோல்களை வலைக்குள் செலுத்தி ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் ஜோசப் க்ளோஸ், பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் போலந்தில் 1978-ஆம் ஆண்டு பிறந்தார். 2014 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். 16 கோல்களை இவர் 24 ஆட்டங்களில் விளையாடி வலைக்குள் அடித்திருக்கிறார்.
15 கோல்கள்
அடுத்த இடத்தில் பிரேசில் வீரர் ரொனால்டோ உள்ளார். 19 ஆட்டங்களில் விளையாடி அவர் 15 கோல்களைப் பதிவு செய்துள்ளார். 1998ம் ஆண்டு உலகக் கோப்பை தான் ரொனால்டோவுக்கு முதல் உலகக் கோப்பை ஆகும்.
14 கோல்கள்
ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் 14 கோல்களை உலகக் கோப்பை தொடரில் அடித்துள்ளார். 1970 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மேற்கு ஜெர்மனிக்காக 10 கோல்களைப் பதிவு செய்து முத்திரை பதித்தார். இதற்காக அவருக்கு தங்க ஷூ வழங்கி கெளரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 75 வயதில் அவர் காலமாகிவிட்டார்.
13 கோல்கள்
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள வீரர் ஜஸ்ட் லூயிஸ் ஃபோன்டைன் ஆவார். பிரான்ஸ் அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற இவர், ஸ்வீடனில் 1958 இல் நடைபெற்ற கால்பந்து தொடரில் 6 ஆட்டங்களில் 13 கோல்களை பதிவு செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இவர் பங்கேற்ற ஒரே உலகக் கோப்பை தொடர் அது மட்டுமே. ஆனால், அவர் அந்த தொடரின் மூலம் வரலாறு படைத்தார்.
12 கோல்கள்
இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள வீரர் கால்பந்து ஜாம்பவான் பீலே ஆவார். இவர் 12 கோல்களை பிரேசில் அணிக்காக அடித்துள்ளார். தங்க ஷூ விருதை அவர் வாங்கவில்லை என்றாலும் 1970 உலகக் கோப்பையில் சிறந்த வீரர் விருதை வென்றார்.