22வது  உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் எச் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில்,  தென் கொரியா-கானா அணிகள் மோதின. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் லீக் போட்டியில் வெற்றி பெறாத நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கின. ஆரம்பம் முதலே கானா வீரர்கள் தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, தென் கொரிய வீரரகள் தடுப்பு ஆட்டத்திலும், கானா வீரர்களின் முயற்சியை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தினர். 


அடுத்தடுத்து கோல் அடித்த கானா அணி:


இதனிடையே,  முகமது சாலிசு ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் முதல்  கோலை அடித்து கானா அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். தொடர்ந்து, அந்த அணி வீரர்கள் தென் கொரியாவின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டவாரே இருந்தனர். அதன் பலனாக, 34வது நிமிடத்தில் முகமது குதுஸ் கானா அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். பதிலடி கொடுக்க முயன்ற தென் கொரிய வீரர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில், கானா அணி 2-0 என முன்னிலை பெற்றது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.


தக்க பதிலடி கொடுத்த தென்கொரியா:


இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் தென் கொரிய வீரர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  பந்தை எதிரணியினர் வசம் செல்லவிடமால் தடுத்ததோடு, கானாவின் கோல் கம்பத்தை தொடர்ந்து முற்றுகையிட்டனர். திறம்பட்ட செயல்பட்ட சோ கு சங் சக வீரர்களிடம் இருந்து கிடைத்த பாஸை நேர்தியாக பயன்படுத்தி 58 மற்றும் 61-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதன் மூலம் போட்டி 2-2 என சமநிலையை எட்டியது. இதில் இரண்டாவது கோலை  ஹெட்டர் மூலம் சோ அடிக்க, ரசிகர்கள் உற்சாக குரலில் முழக்கமிட்டனர்.


முன்னிலை பெற்ற கானா:


இதைடுத்து வெற்றி யாருக்கு என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்க, மைதானத்தில் இருநாட்டு வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  தென் கொரியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக போட்டியின் 68வது நிமிடத்தில் முகமது குதுஸ் மீண்டும்  ஒரு கோல் அடித்தார். இதனால் கானா அணி 3-2 என முன்னிலை பெற்றது.


தோல்வியை தழுவிய தென்கொரியா:


அதைதொடர்ந்து, தென்கொரியா அணி அடுத்த கோலை அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்தன. கானா அணியின் தடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், தென்கொரியாவின் வியூகங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. போட்டி நேரம் முடிந்த பிறகும் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும், தென் கொரியா அணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு, கானா அணி வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் போட்டி நேர முடிவில் கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குரூப்- எச் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளுடன் கானா அணி இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. மேலும்,  நாக்- அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கானா அணி தக்க வைத்துள்ளது.


 


போட்டி நேரத்தில் 64% அளவிற்கு பந்து தென்கொரியா வசமே இருந்தது. 86% வெற்றியுடன் 527 பாஸ்களை துல்லியமாக  அந்த அணி மேற்கொண்டாலும், கானா அணியின் சிறப்பான தடுப்பு ஆட்டத்தின் மூலம், தென் கொரியாவின் முயற்சிகள் செயல்வடிவம் பெறாமல்  அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.