22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


குரூப் சுற்றில் பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றின் முதல் ஆட்டம் கடந்த 3-ஆம் தேதி நடந்தது. அந்த ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, தரவரிசையில் 16-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொண்டது.


மூன்று முறை பைனலுக்கு முன்னேறியுள்ள நெதர்லாந்து அணி அந்த ஆட்டத்தில் அசத்தலாக 3 கோல்களை பதிவு செய்தது. அமெரிக்காவால் 1 கோலை மட்டுமே வலைக்குள் செலுத்த முடிந்தது. இதனால், காலிறுதிக்குள் நுழைந்த முதல் அணியாக நெதர்லாந்து தேர்வானது. அதேநாளில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மோதின.


இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியானது.


காலிறுதியில் நடப்பு சாம்பியன்
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான பிரான்ஸும், போலந்தும் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை தும்சம் செய்து காலிறுதிக்குள் கம்பீரமாக அடியெடுத்து வைத்தது நடப்பு சாம்பியன் பிரான்ஸ்.


மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி தரவரிசையில் 18-ஆவது இடத்தில் உள்ள செனகலை பந்தாடி, காலிறுதிக்குள் நுழைந்தது.


ஜப்பான்-குரோஷியா மோதல்
இன்று இரவு அல் ஜனெளப் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஜப்பானும், குரோஷியாவும் மோதுகிறது.
இந்தத் தொடரில் ஜப்பான் அணி இ பிரிவில் இடம்பெற்றிருந்தது. தனது முத்ல லீக் ஆட்டத்திலேயே முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.






பின்னர் கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தாலும், ஸ்பெயின் உடனான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது ஜப்பான்.


குரோஷியா அணியைப் பொருத்தவரை முதல் ஆட்டத்தில் டிரா செய்து, கனடா அணிக்கு எதிரான குரூப் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. கடைசி லீக் ஆட்டத்திலும் டிரா செய்தாலும் அதிக கோல்கள் அடிப்படையில் அந்த அணி காலிறுதிக்குள் நுழைந்தது. ஜப்பான் உடன் ஒப்பிடும்போது குரோஷியா வலுவான அணியாகவே கருதப்படுகிறது.


இரு அணிகளும் நாக்-அவுட் சுற்றில் மோதுவதன் மூலம், உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக நேருக்கு நேர் சந்திக்கிறது. 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை குரூப் சுற்றில் 0-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் தோல்வி அடைந்தது. 2006 உலகக் கோப்பை தொடரில் கோல் எதுவமே போடாமல் டிரா ஆனது.


இதற்கு முன் ஜப்பான்


ஆனால், இந்த முறை ஜப்பான் அப்படி இல்லை. அதன் டிராக் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால், குரூப் சுற்றில் இரண்டு ஐரோப்பிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது ஜப்பான். 4ஆவது முறையாக ஜப்பான் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு உலகக் கோப்பை தொடரில் முன்னேறி இருக்கிறது. இதில் கடந்த 2 உலகக் கோப்பை தொடரையும் சேர்த்துக் கொள்ளலாம். எனினும், காலிறுதிக்குள் அந்த அணி இதுவரை ஒரு முறை கூட அடியெடுத்து வைத்ததில்லை. 


இதற்கு முன்பு வடகொரியா 1966ஆம் ஆண்டிலும், தென் கொரியா 2002ஆம் ஆண்டிலும் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. குரோஷியாவைப் பொருத்த வரை அந்த அணி மூன்றாவது முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.






கடந்த இரண்டு முறையும் இந்த சுற்று ஆட்டத்தில் ஜெயித்து காலிறுதிக்குள் நுழைந்திருக்கிறது குரோஷியா.
இந்த உலகக் கோப்பை தொடரில் குரூப் பிரிவு ஆட்டங்களில் ஜப்பான் அணி 32.3 சதவீதம் அளவுக்கு கால்பந்தை தங்கள் வசம் வைத்திருந்தது.


நட்சத்திர வீரர்கள்


தோல்வி அடைந்த கோஸ்டா ரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் 56.8 சதவீதம் அந்த அணி வசம் கால்பந்து இருந்தது.
குரோஷியா கனடாவுக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து மற்ற 2 குரூப் ஆட்டங்களிலும் கோல் பதிவு செய்யவில்லை.


குரூப் சுற்றில் ஜப்பான் வீரர் டகுமா அசானோ ஒவ்வொரு 13 நிமிடத்திற்கு ஒரு முறையும் கோல் அடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 83ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் டகுமா. குரோஷியா அணியைப் பொருத்தவரை கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் அன்ட்ரெஜ் கிராமரிக் இரு கோல்களை பதிவு செய்தார். மார்கோ லிவாஜா, லோவ்ரோ மஜேர் ஆகியோரும் தலா 1 கோல்களை பதிவு செய்துள்ளனர்.


இந்த ஆட்டத்திலும் இவர்களின் பங்களிப்பு இருக்குமா என்பது இன்றிரவு தெரிந்து விடும். காலிறுதிக்குள் நுழையப் போகும் 5ஆவது அணி ஜப்பானா இல்லை குரோஷியாவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.