விழுப்புரம் நகர பகுதியில் பட்டப்பகலில் வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்டு 41 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் அருகேயுள்ள அரவிதர் நகர் பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான சோமசுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சோமசுந்தரத்தின் சகோதரனின் மகளுக்கு அருகிலுள்ள பொய்யப்பாக்கத்தில் மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக குடும்பத்துடன் நேற்றைய தினம் காலையில் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருட்டு குறித்து சோமசுந்தரம், தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று தாலுகா போலீசார் விசாரனை செய்ததில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டிலிருந்த 41 சவரன் தங்க நகையை திருடி சென்றது தெரியவந்தது.


திருட்டு குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டினை நோட்டமிட்டு கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  இதே போன்று பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் மது அருந்துவிட்டு பள்ளியிலிருந்த மின் விசிறி, டியூப் லைட், கணினி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் பள்ளியின் பூட்டையும் சேர்த்து எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தலைமைஆசிரியர் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் முழுவதும் 3 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. விழுப்புரம் நகரம், தாலுக்கா, மேற்கு காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இங்குதான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மூன்று காவல் நிலையம் இருந்தும் எந்த வித நடவடிக்கையும் வேகமாக எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.