22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்று மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின.


ஆட்ட நேரம் (90 நிமிடங்கள்) முழுவதும் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் முறை பயன்படுத்தப்பட்டது.


முதல் இரண்டு வாய்ப்புகளை கோல் ஆக்கிய மொரோக்கோ மூன்றாவது வாய்ப்பை தவறவிட்டது. ஆனால், ஸ்பெயின் அணி மூன்று முறையுமே வாய்ப்பை தவறவிட்டது. 4வது வாய்ப்பை மொராக்கோ பயன்படுத்தி கோலாக்கியது.


இதன்மூலம், அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






முன்னதாக, ஆட்டம் முழுவதும் ஸ்பெயின் அணி வசமே கால்பந்து இருந்தது. இருப்பினும் இரு அணிகளுக்கு ஒரு முறைக்கு மேல் ஷாட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


இரு நாட்டு ரசிகர்களுமே அரங்கில் இருந்து பிரார்த்தனை செய்தும் ஆட்ட நேரம் முழுவதும் கோல் அடிக்க முடியவில்லை.


இதுவரை நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோஷியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் இங்கிலாந்து-பிரான்ஸ், குரோஷியா-பிரேசில், நெதர்லாந்து-அர்ஜென்டினா ஆகிய அணிகள் காலிறுதியில் போட்டியிடவுள்ளன.


மொராக்கோ-ஸ்பெயின் ஆகிய அணிகள் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் மோதியது.
இதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு குரூப் சுற்றில் விளையாடியது. அந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மொராக்கா அணியுடன் ஸ்பெயின் மோதிய இதர 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் டிராவும் செய்தது.


2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி இரண்டாவது சுற்றுடன் வெளியேறியது. இரண்டாவது சுற்றில் போட்டியை நடத்திய ரஷ்யாவுடன் மோதியது. ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.


இரண்டாவது சுற்றான காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றில் மொரோக்கான அணி இரண்டாவது முறையாக தகுதி பெற்றது. ஸ்பெயின் அணியைப் பொருத்தவரை உலகக் கோப்பை தொடரில் மொராக்கா அணியை நாக் அவுட் சுற்றில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.


குரூப் சுற்று ஆட்டத்தில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தது. பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கிலும், கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கிலும் மொராக்கோ வெற்றி பெற்றது.


ஸ்பெயின் அணியைப் பொருத்தவரை குரூப் சுற்றில் கோஸ்டா ரிகா அணி 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் தொடங்கியது. ஜெர்மனியுடனான ஆட்டத்தை டிரா செய்தது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.