இந்தியா கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் சாதனையை பிரதிபலிக்கும் விதமாக சர்வதேச கால்பந்து சங்கம் பிபா 3 பகுதிகள் கொண்ட வாழ்க்கை வரலாற்று தொடரை வெளியிட்டுள்ளது. 


சர்வதேச கால்பந்து தொடர்களில் விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 கோலுடன் முதலிடத்திலும், அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 90 கோலுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக, இந்திய அணி கேப்டன் 38 வயதான சுனில் செத்ரி 84 கோல் அடித்து 3வது இடத்தில் உள்ளார். 






அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான பிபா 3 பகுதிகள் கொண்ட வாழ்க்கை வரலாற்று தொடரை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தின் 3பகுதிகளையும் FIFA+ இணையதளத்தில் பார்த்து ரசிக்கலாம். 


இதுகுறித்து பிபா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “'ரொனால்டோ, மெஸ்ஸி பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள். சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்களில் 3வது இடத்தில் உள்ள ஒருவர் பற்றிய கதையை தெரிந்துகொள்ளுங்கள். சுனில் செட்ரி/கேப்டன் பென்டாஸ்டிக்... தற்போது FIFA+ல்” என்று பதிவிட்டுள்ளது. 


முதல் எபிசோட்டில் செட்ரி 20 வயது வீரராக இந்திய அணியில் அறிமுகம், அவரது பயிற்சியாளர்கள், நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், சக வீரர்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. 2வது பகுதியில் அவர் சர்வதேச போட்டிகளில் கோல் மழை பொழியும் காட்சிகளும், வெளிநாட்டு கிளப் அணிக்காக விளையாட வேண்டும் என்ற அவரது கனவு உள்பட சுவாரசியமான நிகழ்வுகளும் அதில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி எபிசோடில் சுனில் சேத்ரி வென்ற பட்டங்கள், கோப்பைகள், படைத்த சாதனைகள், சொந்த வாழ்க்கை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. 2005ல் இந்திய அணியில் அறிமுகமான சுனில் சேத்ரி இதுவரை 131 போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.






இதையடுத்து, சுனில் சேத்ரியை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ”வெல்டன் சுனில் சேத்ரி! இது நிச்சயமாக இந்தியாவில் கால்பந்தின் பிரபலத்தை அதிகரிக்கும்” என பதிவிட்டுள்ளார்.