இந்திய விளையாட்டு வீராங்கனைகள் தங்களின் பயிற்சியாளர்கள் மீது புகார் கூறுவது அண்மைக்காலமாகவே அதிகரித்து வருகிறது. 


அண்மையில் தான் இந்திய சைக்கிளிங் வீராங்கனை ஒருவர், இந்திய பயிற்சியாளர் ஆர்.கே.ஷர்மா மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய விளையாட்டு ஆணையத்திடம் புகார் அளித்தார். இந்நிலையில் படகுப் போட்டி வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.


இந்திய படகுப் போட்டி அணியானது தற்போது ஜெர்மனியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த போட்டியிலும் பங்கேற்றது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதியன்று இந்திய விளையாட்டு ஆணையத்திடம் ஒரு புகாரை முன்வைத்துள்ளார் படகுப் போட்டி விராங்கனை. தனக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் தன்னை அசவுகரியமாக உணர வைப்பதாக கூறியுள்ளார். அந்த பயிற்சியாளர் யாட்டிங் அசோஷியன் ஆஃப் இந்தியாவால் நியமிக்கப்பட்டவர் ஆவார். அதே பயிற்சியாளர் மீது தான் ஏற்கெனவே பலமுறை புகார் கூறியிருப்பதாகவும் ஆனால் ஒருமுறை கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையமானது சம்பந்தப்பட்ட யாட்டிங் அசோஷியன் விரைவில் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.




மூத்த வீராங்கனை அளித்த புகார்:


இந்திய சைக்கிளிங் வீராங்கனை ஒருவர், இந்திய பயிற்சியாளர் ஆர்.கே.ஷர்மா மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்தார்.


இதனைத் தொடர்ந்து ஸ்லோவேனியா சென்றுள்ள இந்திய அணியை நாடு திரும்ப இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. "பயிற்சியாளர் என்னை அவருடன் ஒரே அறையில் தங்குமாறு வற்புறுத்தினார். அவரது மனைவியை போல நான் நடந்து கொள்ளுமாறு சொன்னார்" என அந்த வீராங்கனை புகார் கூறியிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக இரண்டு குழுக்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.  இந்திய விளையாட்டு ஆணையத்தின் குழு,  இந்திய சைக்கிள் கூட்டமைப்பின் விசாரணைக் குழு என இரண்டு குழுக்களும் விசாரணை செய்யவுள்ளன.


ஒரே ஒரு வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்:


இந்திய சைக்கிளிங் அணியில் 5 வீரர்கள் மற்றும் ஒரே ஒரு வீராங்கனை தான் உள்ளனர். குறைவான வீரர்களைக் கொண்ட அணி சர்வதேச களம் காண்பதே பெரிய விஷயம். அப்படியிருக்க இந்திய சைக்கிளிங் அணி ஸ்லோவேனியாவிற்கு சென்றிருந்தது. ஜூன் 14-ஆம் தேதி வரையில் அவர்கள் அங்கே பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில்தான் பாலியல் புகாரால் அணியை திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்லோவேனியா சென்ற அணியில் பெண் பயிற்சியாளர் யாரும் பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. 


அடுக்கடுக்காக வரும் பாலியல் புகார்கள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.