இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர்தான் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் தொடர்  என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நாளை மதியம் 3.30 மணிக்கு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 


இந்நிலையில் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தின் பின்னணி என்ன? 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட்டில் என்ன நடந்தது?


ட்ரெண்ட் பிரிட்ஜில் இந்தியா:


ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானம் எப்போதும் இந்தியாவிற்கு ஒரு நல்ல மைதானமாகவே அமைந்துள்ளது. இங்கு இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 டிரா செய்துள்ளது. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 




ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 541 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் பந்துவீச்சில் ஜாகிர் கான் மற்றும் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இதுவரை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றுள்ள 63 டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 23 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 17 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிகபட்சமாக 658/8 என்ற ஸ்கோரை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


2018 இங்கிலாந்து -இந்தியா ட்ரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட்:


2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 97 ரன்களும், ரஹானே 87 ரன்களும் அடித்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மல மல வென சரிந்தது. அந்த அணி முதல் இன்னிஙில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 




இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மீண்டும் சிறப்பாக விளையாடி சதம் கடந்து அசத்துவார். அவர் 103 ரன்கள் அடித்ததால் இந்திய அணி 352/7 என்ற ஸ்கோர் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்யும். இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து அணியின் பட்லர் சதம் கடந்திருந்தாலும் மற்ற வீரர்கள் பும்ரா வேகத்தில் நடையை கட்டினர். பும்ரா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்துவார். இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம் பொதுவாக வேகப்பந்துவீச்சிற்கு அதிக ஒத்துழைப்பு அளிக்கும். மேலும் அங்கு மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் பேட்டிங் செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆகவே அங்கு நடைபெறும் போட்டிகள் பெரும்பாலும் அதிகபட்ச ரன்கள் அடிக்கப்படுவது வழக்கம். எனினும் நான்காவது இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: மகளிர் ஹாக்கி அணி, நீரஜ் சோப்ரா,அன்ஷூ மாலிக்.. நாளைக்கு களம்காணும் ஒலிம்பிக் லிஸ்ட்!