இங்கிலாந்து-இந்தியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷர்தல் தாகூர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் இஷாந்த் சர்மா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அது தவிர இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இரண்டாவது டெஸ்டிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிராட் காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் மார்க் வூட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் ஹசிப் ஹமீது மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் தலைவலியாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தில் மிகவும் குறைவான சராசரியையே வைத்துள்ளனர். அவர்கள் இதுவரை அங்கு ஒரு போட்டியில் ஆடியிருந்தாலும் அதில் இரண்டு இன்னிங்ஸிலும் அவர்கள் மோசமாகவே பேட்டிங் செய்துள்ளனர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் லார்ட்ஸ் மைதானத்தில்:
பேட்ஸ்மேன்கள் | போட்டிகள் | ரன்கள் | சராசரி |
விராட் கோலி | 2 | 65 | 16.25 |
புஜாரா | 2 | 89 | 22.25 |
ராகுல் | 1 | 18 | 9.00 |
ரஹானே | 2 | 139 | 34.75 |
அஸ்வின் | 1 | 62 | 62.00 |
ஜடேஜா | 1 | 71 | 35.50 |
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டு போட்டிகளில் விளையாடி வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இங்கு இவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த மைதானத்தில் இந்திய சார்பில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது ரஹானே தான் அவர் 2 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஒரு போட்டியில் விளையாடி நல்ல சராசரியை வைத்துள்ளனர்.
எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை இந்திய பேட்ஸ்மேன்கள் நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: முதல் டெஸ்டில் 9 விக்கெட்... தரவரிசையில் 10 இடங்கள் முன்னேற்றம்- அசத்திய பும்ரா..!