2022ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசரதுல்லா ஷசாய் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் களமிறங்கினர். இந்த ஜோடி சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தன. ஷசாய் 7 ரன்களிலும், ரஹமனுல்லா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 






இதனை தொடர்ந்து, இப்ரஹீம் ஷத்ரன் மற்றும் உஸ்மான் கானி இணை சேர்ந்தனர். இந்த இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. நிதானமாக விளையாடிய இப்ரஹீம் 32 ரன்கள் குவித்து சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


அதன் பின் களமிறங்கிய நஜிபுல்லா 13 ரன்களிலும், கேப்டன் முகமது நபி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 


பின்னர், களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன் ஏதும் எடுக்கவில்லை. அஸ்மதுல்லா 8 ரன்களிலும், ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ரன் ஏதும் குவிக்காமலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 112 ரன்கள் மட்டுமே குவித்தது.


113 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பட்லர் 18 ரன்களும் மற்றும் அலக்ஸ் கெல்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்து வெளியேறினார். அடுத்து வந்த மலான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துக்களில் 18 ரன்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 113 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்தின் சாம் கரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.