பிரிட்டனில் தொடரும் அரசியல் குழப்பம் காரணமாக பதவியேற்ற 45 நாள்களிலேயே அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலக நேர்ந்தது. ரஷிய - உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக மின்சார விலையை கட்டுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் முன்னதாக தோல்வி அடைந்தன.


பணக்காரர்கள் உள்பட அனைவருக்கும் வரி குறைப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், பிரிட்டன் கரன்சியின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்தால் அவரால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதையடுத்து, கடும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் அவர் ராஜினாமா செய்தார்.






இந்நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்ச்சையில் சிக்கி பிரதமர் பதவியில் இருந்த விலகிய போரிஸ் ஜான்சன், மீண்டும் பிரதமராக முயற்சிப்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன.


2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் பிரிட்டனில்  கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு அமைந்துள்ள டவுனிங் தெருவில் அவர் பார்ட்டி நடத்தியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் எழுந்தது. 


முதலில் இது மறுக்கப்பட்ட நிலையில் பின் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சொந்த கட்சியை சேர்ந்த எம்பிக்களே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து, கடந்த ஜூலை 7ஆம் தேதி, போரிஸ் பிரதமர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. இதையடுத்துதான், லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.


அடுத்த பிரிட்டன் பிரதமராக வருவதற்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி மோர்டான்ட் நடவடிக்கை எடுத்து வருகிறார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அவர் அறிவித்துள்ளார். அதேபோல, லிஸ் டிரிஸிடம் பிரதமர் பதவிக்கான போட்டியில் தோல்வி அந்த இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கும் பிரமதராக வருவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


இதில், பிரிட்டன் பிரதமராக வருவதற்கு ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொது தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அங்கு நிலவும் அரசியல் சூழல் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் மாறியுள்ளனர்.


தற்போது, தேர்தல் நடத்தப்பட்டால் கன்சர்வேட்டிவ் கட்சி மிக பெரிய தோல்வியை சந்திக்கும் என கருத்துகணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.