இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நள்ளிரவு 12. 07 மணிக்கு, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்திற்குச் சொந்தமான 36 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளது.


உலகளாவிய சந்தையில் வணிக ரீதியிலாக விண்ணில் ஏவப்படும் முயற்சியை இந்தியா முதன்முதலாக முழுமையாக செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் 12.07 மணிக்கு தொடங்கியது. 


LVM3-M2 ராக்கெட்:


LVM3-M2 ராக்கெட்டானது, ஜி.எஸ்.எல். வி.எம். எம்3 (Geosynchronous Satellite Launch Vehicle Mark III) ராக்கெட்டின் மறுவடிவமாக பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டானது மிக அதிக எடையுள்ளவற்றை விண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தது. மேலும் இதன் மூலம் புவியினுடைய சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த முடியும். இந்த ராக்கெட்டானது மூன்று படிநிலைகளை கொண்டதாகும். 






ஒன்வெப் (OneWeb) திட்டம்:


இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனமானது, தகவல் தொடர்பை வழங்கும் உலகளாவிய கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான தகவல் தொடர்பை வழங்கும் நிறுவனமான செயல்பட்டு வருகிறது


இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரோவும், என்.எஸ்.ஐ. எல். (NSIL) நிறுவனமும் இணைந்து புவியின் தாழ்வான வட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளன.


வணிக ரீதியில் ராக்கெட் ஏவுதலுக்கான உலகளாவிய சந்தையில் இஸ்ரோ தன் பயணத்தை முழுவதுமாக தொடங்கும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் உலகளாவிய இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது, 648 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இலக்காக வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அனுப்பப்பட உள்ள 36 செயற்கைக் கோள்களையும் சேர்த்து 462 ஆகிறது. இது ஒன்வெப் நிறுவனம் 14-வது முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.


புவியின் வட்டப்பாதையில் 12 ஆர்பிட்களில் (ஒவ்வொரு ஆர்பிட்டிலும் 49 செயற்கைக்கோள்கள்) 648 செயற்கைக்கோள்கள் நிறுத்திவைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.






கவுண்ட் டவுண்:


இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கப்பட்ட கவுண்டவுனானது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நள்ளிரவு 12.07 மணிக்கு செலுத்தப்படவுள்ளது.