லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களையும், இங்கிலாந்து அணி 394 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.


நான்காவது நாளான இன்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் பந்தை தனது காலில் அணிந்திருந்த ஷூ வின் முள்ளால் குத்தி சேதப்படுத்தினார். அவருக்கு சக வீரர் ஒருவர் பந்தை தனது ஷூவால் மிதித்து அவருக்கு தட்டிவிட்டார். பின்னர், ராபின்சன் பந்தை தனது ஷூவால் மிதித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஓராண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராபின்சன் ஏற்கனவே இனவெறியை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்து, அணியில் இருந்து நீக்கப்பட்ட சூழலில் தற்போதுதான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். தற்போது மீண்டும் சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக, கள நடுவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், இது என்ன பால் டேம்பரிங்கா? கொரோனா பாதுகாப்பு அளவீடா? என்று பதிவிட்டுள்ளார். 






இந்த நிலையில், நான்காவது நாளான இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சதமடித்த கே.எல்.ராகுல் ஆண்டர்சன், ராபின்சன், மார்க்வுட் வேகத்தில் மிகவும் தடுமாறினார். இதனால், மார்க் வுட் வேகத்தில் கே.எல்.ராகுல் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா முதல் இன்னிங்சை போல அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவர் சாம் கரன் வேகத்தில் 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களை எடுத்து வெளியேறினார். இதனால், இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.




இதையடுத்து, அணியின் துணை கேப்டன் ரஹானேவும், மற்றொரு நம்பிக்கை தரும் வீரரான சட்டீஸ்வர் புஜாராவும் ஜோடி சேர்ந்தனர். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது. ரன்களை காட்டிலும் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் மிகவும் கவனமாக ஆடினார்.


மார்க்வுட், ராபின்சன், ஆண்டர்சன், சாம் கரன் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு தாக்குதலை இந்த ஜோடி மிகவும் நேர்த்தியாக, கவனமாக எதிர்த்து ஆடியது. அதே சமயத்தில் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களை சேர்த்தனர். சற்றுமுன் வரை இந்திய அணி 65 ஓவர்களில் 131 ரன்களை சேர்த்து தொடர்ந்து ஆடி வருகிறது. இந்திய அணி இங்கிலாந்தை விட தற்போது 104 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர். துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே 116 பந்துகளில் 45 ரன்களுடனும், புஜாரா 182 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.




ஆட்டம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால் இந்த போட்டி பரப்பான சூழலை எட்டியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி இன்றும் ஆடியும், நாளையும் ஆடினால் ஆட்டம் டிராவாகவே வாய்ப்புகள் நிறைய உள்ளது. அதேசமயம் இந்திய அணியின் கைவசம் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளதால் இந்திய அணியும் நிதானமாகவே ஆட முயற்சிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.