இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி கேப்டன் பட்லரின் அதிரடி அரைசதம் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியால் 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி போட்டியை வென்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸின் போது லியாம் லிவிங்ஸ்டோன் அடித்த இமாலய சிக்சர் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து இன்னிங்ஸின் போது ஆட்டத்தின் 16ஆவது ஓவரை ஹசிஃப் ராஃப் வீசினார். அப்போது முதல் பந்தை எதிர்கொண்ட லியாம் லிவிங்ஸ்டோன் அதை சிக்சருக்கு விரட்ட முற்பட்டு தூக்கி அடித்தார். அவர் அடித்த அடியில் அந்தப் பந்து லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தை தாண்டி அருகே இருந்த ரக்பி விளையாட்டு மைதானத்தில் விழுந்தது. இந்த சிக்ஸ் தொடர்பான வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "இது தான் பெரிய சிக்சரா? லீட்ஸ் ரைநோஸ் பந்தை கொஞ்சம் திருப்பி கொடுங்கள்" எனப் பதிவிட்டிருந்தது. ஏனென்றால் அந்த மைதானத்திற்கு அருகே இருந்த ரக்பி மைதானம் லீட்ஸ் ரைநோஸ் என்ற ரக்பி அணியைச் சேர்ந்தது.
இதற்கு அந்த ரக்பி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதில் பதிவையும் செய்துள்ளது. அதில், "நல்ல ஷாட் லிவிங்ஸ்டோன். கார்டன் கிரிக்கெட் விதிகள் அமலில் இல்லை. அந்த விதி அமலில் இருந்திருந்தால் அடுத்தவரின் இடத்திற்குள் தூக்கி அடித்தால் நீங்கள் அவுட். எங்களுடைய ஒரு வாசலை திறந்து வைத்துள்ளோம். நீங்களே வந்து பந்தை எடுத்து கொள்ளுங்கள்" என்று நக்கலாக பதிவிட்டுள்ளது. மேலும் இந்த 122 மீட்டர் சிக்சர் வீடியோவை பார்த்து பலரும் வியந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு இந்த சிக்சர் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பலரும் பதிவிட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைந்த கொரோனா.. 2 வீரர்களுக்கு பாசிட்டிவ்..!