இங்கிலாந்து நாட்டில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த நாட்டின் பந்து வீச்சாளர் ராபின்சன் திகழ்ந்தார். அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார், போட்டியின் நான்காவது நாளான இன்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா மற்றும் விராட்கோலியை ராபின்சனே வெளியேற்றினார்.
இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய பேட்டிங் வரிசைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் ராபின்சனுக்கு ஒரு மறக்க வேண்டிய பிளாஷ்பேக் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்திருந்த நியூசிலாந்து அணி தனது பயிற்சி போட்டியில் இங்கிலாந்துடன் ஆடியது.
கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்சில்தான் இங்கிலாந்து அணிக்காக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் ஒல்லி ராபின்சன். 27 வயதான ராபின்சன் தனது முதல் போட்டியிலே மிகவும் நேர்த்தியாகவும், லென்தியாகவும் பந்து வீசினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
சமூக வலைதளத்தில் அவரை பாராட்டிய ரசிகர்களுக்கு, அவரது சமூக வலைதள பக்கமே அவரை திட்டுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. ராபின்சன் 7 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 19 வயதில் நிறவெறியை தூண்டும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிராக ஆணாதிக்கத்துடனும் கருத்து தெரிவித்திருந்தனர். அதை கண்ட ரசிகர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களையும், கண்டனங்களையும் வைத்தனர். மேலும், அவரை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தான் சிறு வயதில் அறியாமல் செய்த தவறு என்றும், இதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு மன்னிப்பு கடிதமும் அளித்தார். ஆனால், அவர் மீதான கண்டனங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து அவரை சர்வதேச போட்டிகளில் ஆட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. முதல் போட்டியிலே முடிவுக்கு வந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை என்று பலரும் அவரை விமர்சித்தனர்.
இந்த நிலையில் ஜூன் மாதம் அவர் மீது விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் மாதமே முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ராபின்சனுக்கு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ராபின்சனும் இந்த தொடர் தொடங்கியது முதல் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சனை காட்டிலும் இந்திய அணிக்கு அதிக குடைச்சல் கொடுத்து வருகிறார். இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 16 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வருங்காலத்தில் இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் போன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ராபின்சன் வலம் வருவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.