தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, புதிதாக 1551 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
26,10,299 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 230 பேரும், சென்னையில் 182 பேரும், ஈரோட்டில் 115 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும், தஞ்சாவூரில் 77 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,59,775 ஆக உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.06% ஆகும்.  




குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1,768 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,57,884 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். அதே சமயம்,  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 31,374 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,18,52,802 பேர் குணமடைந்துள்ளனர் 


இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,856 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8395  பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் (247) பதிவு செய்துள்ளது.  கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 




சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,559 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி  தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 0.9 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது ஒருவருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது.  


கொரோனா பரிசோதனை: கடந்த 24 மணிநேரத்தில், 1,63,230 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 4  (4,18,53,989) கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் அதிகமாக இருந்தால், கொரோனா ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று, தேசிய அளவில், வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.10%) 63 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் (2.45%) 32 நாட்களாக 3%க்கும் கீழ் பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 51.49 கோடியாக அதிகரித்துள்ளது.


பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம்: எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று  மத்திய சுகாதார செயலாளர் மாநிலங்களுக்கு எச்சரித்துள்ளார். தேசிய அளவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், சில மாநிலங்களில் உள்ளூர் மட்ட பரவல் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.   


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அன்றாட புதிய பாதிப்புகளும் அதிகரித்து வரும் மாவட்டங்களில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பொது சுகாதார நடவடிக்கைகள், கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்