இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே இங்கிலாந்தில் பட்டோடி தொடர் நடைபெற்று வருகிறது. லீட்சில் கடந்த 25-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இங்கிலாந்து அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத தோல்வியை இந்திய அணிக்கு அளித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாக தகுதிபெற்ற இந்திய அணி, இந்த 2021ம் ஆண்டு இன்னிங்ஸ் தோல்வியை தழுவுவது இதுவே முதன்முறை ஆகும்.


இங்கிலாந்து அணி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணி இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அந்த தொடரை வென்றது. அந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் 317 ரன்கள் வித்தியாசத்திலும், 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியாவிடம் பரிதாபமாக தோற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.




அந்த போட்டியில் ரிஷப் பண்ட் சதத்தின் உதவியாலும், வாஷிங்டன் சுந்தர் உதவியாலும் இந்தியா முதல் இன்னிங்சில் 365 ரன்களை குவித்தது. இந்தியாவிற்கு முன்பு பேட் செய்த இங்கிலாந்து அணி அக்ஷர் படேல் மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியை அஸ்வினும், அக்‌ஷர் படேலும் 135 ரன்களுக்கு சுருட்டி வீசினர். இதனால், அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


அப்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் அணியாக கருதப்பட்ட இங்கிலாந்திற்கு அந்த தோல்வி மிகவும் மோசமானதாக அமைந்தது. லீட்ஸ் நகரத்தில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் இன்று அடைந்துள்ள இந்த இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாச மாபெரும் வெற்றி மூலம் இந்திய அணியை 5 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து இன்று பழி தீர்த்துள்ளது. மேலும், லீட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக 54 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றும் புதிய சரித்திர சாதனையை ஜோ ரூட் தலைமையிலான அணி படைத்துள்ளது.




அகமாதாபாத்தில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றிக்கு எப்படி இந்திய பந்துவீச்சாளர்கள் காரணமாக இருந்தனரோ, அதேபோல இங்கிலாந்தின் இன்றைய வெற்றிக்கு அந்த நாட்டின் வேகப்பந்து வீச்சாளர்களே காரணமாக அமைந்துள்ளனர்.