இங்கிலாந்தில் சம்மர் கிரிக்கெட் திருவிழா தொடங்கியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. மழையால் 4வது நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டதே இந்த போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணம்.
273 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு
மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் இறுதி நாளான நேற்று 273 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. 70 ஓவர்களில் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஆட தொடங்கிய இங்கிலாந்து அணியினர் ரன்களை துரத்தி வெற்றிக்கு செல்ல முற்படவில்லை. பெரும்பாலும் ட்ராவை நோக்கியே இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன் விளையாடினர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் டோமினிக் சிப்லே 207 பந்துகள் விளையாடி வெறும் 60 ரன்களை அடித்தார். இறுதியில் 170-3 என்றிருந்த போது ஐந்தாவது நாள் ஆட்டம் நிறைவடைந்து போட்டி ட்ராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
வரலாறு படைத்த டேவான் கான்வே
முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஒரு பக்கம் வந்தார்கள், போனார்கள். ஆனால் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய டேவான் கான்வே தனது மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 114-3 என்ற நிலையில் நியூசிலாந்து அணி தடுமாறி கொண்டிருந்தது. இந்த நிலையில் 4வது விக்கெட்டிற்கு டேவான் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஹென்றி நிக்கோலஸ் இருவரும் இணை சேர்ந்து 174 ரன்களை சேர்த்தனர். 61 ரன்களில் நிக்கோலஸ் ஆட்டமிழக்க, அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் விரைவாக அவுட் ஆகி வெளியேறினர். இதனால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 378 ரன்களை சேர்த்தது. அதில் நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர் டேவான் கான்வே அறிமுகமான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 200 ரன்களை விளாசி பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.
இங்கிலாந்து அணியை மீட்டெடுத்த ரோரி பர்ன்ஸ்
தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோரி பர்ன்ஸ் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, டோமினிக் சிப்லே பூஜ்யம், ஜாக் க்ராளி 2 ரன் எடுத்து வெளியேற 18-2 என்ற நிலையில் இங்கிலாந்து அணி தவித்தது. அப்போது உள்ளே வந்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோரி பர்ன்ஸ், ஜோ ரூட் இருவரும் இனைந்து 93 ரன்களை 3வது விக்கெட்டிற்கு சேர்த்தனர், 42 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஜோ ரூட் அவுட் ஆகி வெளியேற 275 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 132 ரன்கள் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார், அவரை தவிர்த்து எந்த வீரரும் அரை சதம் கூட அடிக்கவில்லை.
மேலும் அறிய : என்னாது அஸ்வின் ஆல் டைம் கிரேட்டா ? - கொளுத்திப்போட்ட சஞ்சய் மஞ்ரேக்கர்!
மழையால் பறிபோன நியூசிலாந்து அணியின் கனவு
முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்க்ஸை ஆட தொடங்கிய நியூசிலாந்து அணி வலுவான நிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது, 62-2 என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாடி கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து பெய்த மழையால் 4வது நாள் ஆட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதனால் கடைசி நாளான நேற்று வேகமாக ரன்களை சேர்க்க முயன்றது நியூசிலாந்து அணி, 169 ரன்களுக்கு 6 விக்கெட்கள் விழுந்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் அத்துடன் தனது 2வது இன்னிங்ஸை டிக்லேர் செய்தது.