நாட்டின் பொதுத்துறை சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ரூ. 6 லட்சம் கோடி சொத்து உருவாக்கம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருப்பது குறித்து ராகுல்காந்தி விமர்சித்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, “அரசின் சொத்துக்களை குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குறியது. நாட்டின் சொத்துகள் அனைத்தையும் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு விற்றுவிட்டது. அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பிரதமர் பரிசாக அளிக்கிறார். கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என பாஜகவும், பிரதமரும் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் விற்க நினைப்பவை 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை” என்று கூறினார்.
மேலும், 42,000 கிலோ மீட்டர் தூர மின்வழித்தடங்களை தனியாருக்கு பிரதமர் தாரை வார்ப்பதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பொதுச்சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்று வருவதாகவும், 25 விமான நிலையங்கள், உணவு தானியக் கிடங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
மேலும், “நீண்டகாலமாக நஷ்டத்தில் இருக்கும் தொழில்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். குறைந்த சந்தைப் பங்கைக் கொண்ட நிறுவனங்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். ஒரு குறிப்பிட்ட துறையில் தனியார் துறை ஏகபோகத்தை சரிபார்க்கும் திறனுடன் நாங்கள் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவில்லை” என்றும் ராகுல் காந்தி கூறினார்.
மத்திய பாஜக அரசு நிதி ஆயோக் உதவியுடன் தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின் மூலம் பெரும் வருவாய் தரக்கூடிய அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு ₹6 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2022 முதல் 2025 வரையிலான இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 15 ரயில்நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 160 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. குறிப்பாக இதில் தமிழ்நாட்டில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் விமான நிலையங்கள் தனியார் வசம் செல்கின்றன.
இதுகுறித்து பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தேசிய பணமாக்கும் திட்டம் என்பது அரசு நிறுவனங்கள் மீது தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த நிறுவனங்களை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய், புதிய திட்டங்களை தொடங்குவதற்கும், உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும்" என்றார்.