இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிய போட்டியில், சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணியில் அஷ்வின் ஏன் இல்லை என்று கேள்வி கேட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில், அஷ்வினை அணியில் எடுக்காதது பற்றி விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஓவல் கிரிக்கெட் மைதானத்டில் அஷ்வின் தனிமையில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது.
முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால், இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஷ்வின் இடம் பெறாதது குறித்து ட்வீட் செய்திருந்த முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அஷ்வின் இந்த போட்டியில் விளையாடி இருந்தால் இங்கிலாந்தின் வெற்றி பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கும் எனவும் ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில், அஷ்வின் சர்ரே அணிக்காக விளையாடி விளையாடினார். இந்த தொடரில் சோமர்செட் மற்றும் சர்ரே அணிகளுக்கு இடையேயான போட்டியில், அஷ்வின், ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவல் மைதானத்தில் அதிரடி காட்டிய அஷ்வின் அணியில் இடம் பெறாதது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டி முடிவில் கேப்டன் கோலி அதற்கான பதிலை தெரியப்படுத்துவார் என தெரிகிறது.