இங்கிலாந்துக்கு எதிராக அந்த நாட்டில் நடைபெற்று வரும் பட்டோடி தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி அந்த நாட்டின் லீட்ஸ் நகரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


பந்துவீச்சில் வலுவாக இங்கிலாந்து அணி பேட்டிங்கில் முழுக்க, முழுக்க அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டை நம்பியே உள்ளனர். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் இரு இன்னிங்சிலும் ரூட் அடித்த ரன்னால் மட்டுமே அந்த அணியினரால் ரன்கள் குவிக்க முடிந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய மார்க் உட் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டிருப்பது அந்த அணிக்கு கவலை அளித்துள்ளது. இருப்பினும் அவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.




இங்கிலாந்து அணியில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடாத டான் சிப்ளி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் ஷகிப் மெஹ்மூத்தும் சேர்க்கப்பட்டுள்ளார்.


டேவிட் மலான் பற்றி அந்த நாட்டு அணியின் பயிற்சியாளர் சில்வர் உட் கூறியதாவது, “ டெஸ்ட் போட்டிகளுக்கு தகுதியானவர் டேவிட் மலான். அனைத்து விதமான போட்டிகளிலும் டேவிட் மலான் நன்றாக விளையாடும் திறன்படைத்தவர். லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்டில் மலான் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். கடந்த ஜூன் மாதம் சக்செஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் யார்க்ஸையர் அணிக்காக ஆடிய மலான் 199 ரன்களை சேர்த்துள்ளார். மார்க் உட் விரைவில் குணமடைந்துவிடுவார். மெஹ்மூத் முதன்முறையாக டெஸட் போட்டியில் அறிமுகமாகிறார். இலங்கை தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.“ இவ்வாறு அவர் கூறினார்.


33 வயதான டேவிட் மலான் 15 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி 724 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் 140 ஆகும். 6 அரைசதங்களையும் அவர் அடித்துள்ளார். இந்தாண்டு அவர் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார்.




இங்கிலாந்து அணியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஜோ ரூட் தலைமையில், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பட்லர், சாம்கரண், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், சகிப் மெஹ்முத், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ராபின்சன், மார்க் உட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய அணியுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்தின் பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமாக உள்ளது என்பது லார்ட்சில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து ஆடிய விதத்திலே அனைவருக்கும் தெரிந்துவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் டெயிலண்டர்கள் வரை அனைவரும் மோசமாக ஆடி வருகின்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன், மார்க் உட் மட்டுமே சிறப்பாக வீசி வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்கரன் இதுவரை சிறப்பாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் மலானின் வருகை அந்த அணிக்கு கைகொடுக்குமா என்பதை மூன்றாவது டெஸ்டில் பொறுத்திருந்து பார்ப்போம்.