இரண்டாம் பாதியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த நிலையில், சுமார் 5 மாத இடைவெளியில் நடைபெற உள்ள இரண்டாம் பாதி ஐ.பி.எல். தொடரில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் சிலர் அறிமுகமாக உள்ளனர். அவர்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சில வெளிநாட்டு வீரர்களை பற்றி கீழே காணலாம்.


டிம் டேவிட் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) :


விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்காக களமிறங்க உள்ள டிம் டேவிட் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர். 25 வயதான இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர். இவரது பலமே இவரது உயரம்தான்.




6 அடி 5 அடி உயரம் கொண்ட இவர் சிங்கப்பூரின் தேசிய அணிக்காக மட்டுமின்றி, ஆஸ்திரேலியன் யூனிவர்சிட்டிஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், லாகூர் காலண்டர்ஸ், பெர்த் ஸ்கார்செர்ஸ், சதர்ன் ப்ரேவ், செயின்ட் லூசியா கிங்ஸ், சர்ரே, தெற்கு ஆஸ்திரேலியாவின் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணி, தெற்கு ஆஸ்திரேலியா 11 அணிகளுக்காகவும் ஆடியுள்ளார். 62 டி20 போட்டிகளில் 1468 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 92 ரன்களை குவித்துள்ளார், ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் தொடரில் சிறப்பாக ஆடியதாலே இவரை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.


ஜார்ஜ் கார்டன் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) :


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் ஜார்ஜ் கார்டன். டி10 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய காரணத்தால் இவரை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 24 வயதான ஜார்ஜ் கார்டன் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அவர், இங்கிலாந்து நாட்டின் சச்செக்ஸ்  அணிக்காக ஆடியுள்ளார்.




வங்காளதேசத்தில் 2016ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணிக்காகவும் ஆடியுள்ளார். 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் 9 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை கார்டன் கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமின்றி நடப்பாண்டில் இதுவரை 6 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுவரை 38 டி20 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்,


நாதன் எல்லீஸ் ( பஞ்சாப் கிங்ஸ்) : 


பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் அறிமுக வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் எல்லீஸ் என்ற வேகப்பந்துவீச்சாளர் களமிறங்க உள்ளார். 26 வயதான நாதன் எல்லீஸ் இதுவரை 2 டி20 போட்டிகளில் ஆடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




வங்காளதேச அணிக்கு எதிராக தனது சர்வதேச அறிமுக டி20 போட்டியிலே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுமட்டுமின்றி ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டியில் அறிமுகமான அவர் ஆறு விக்கெட்டுகளையும், மார்ஷ் கோப்பை தொடரில் தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியும் உள்ளார். இதனால், அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கிளென் பிலிப்ஸ்  (ராஜஸ்தான் ராயல்ஸ்) :


நியூசிலாந்து அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் கிளென் பிலிப்ஸ். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பிலிப்ஸ் உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த பிலிப்ஸ் நியூசிலாந்தில் வளர்ந்தவர். 24 வயதான இவர் 1 டெஸ்ட் போட்டியில் ஆடி 52 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயத்தில் 25 டி20 போட்டிகளில் ஆடி 505 ரன்களை குவித்துள்ளார்.




அதிகபட்சமாக டி20 போட்டியில் 108 ரன்களை குவித்துள்ளார். 2 அரைசதங்களும் அடித்துள்ளார். அவரது அபார பேட்டிங் திறமையால் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் இல்லாத காரணத்தால், கிளென் பிலிப்ஸ் தனது திறமையை நிரூபிப்பதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.


ஹசரங்கா ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) :


இலங்கை அணியைச் சேர்ந்த வலது கை சுழற்பந்துவீச்சாளரான ஹசரங்கா, அந்த அணியின் எதிர்கால நட்சத்திரமாக ஒளிர்வார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஹசரங்கா திறம்பட செயல்பட்டால் அந்த அணியின் ஜாம்பவானாகிய முத்தையா முரளிதரனைப் போல முன்னேறலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஹசரங்கா சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.




ஹசரங்கா இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளையும், 29 ஒருநாள் போட்டிகளில் ஆடி 29 விக்கெட்டுகளையும், 24 டி20 போட்டிகளில் ஆடி 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி20 போட்டியில் அதிகபட்சமாக 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது இவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. ஹசரங்கா நெருக்கடியான நேரங்களில் பேட்டிங்கும் செய்யும் திறன் கொண்டவர்.


பென் துவார்ஷூஸ் (டெல்லி கேபிடல்ஸ்) : 


டெல்லி அணிக்காக இந்த தொடரில் அறிமுக வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளவர் பென் துவார்ஷூஸ். 27 வயதான இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். வேகப்பந்துவீச்சாளரான இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஸ் லீக் தொடரில் ஆடி தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். டி20 போட்டிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்.




ஆஸ்திரேலியாவின் சிட்னி சிக்ஸர்ஸ், நியூசவுத் வேல்ஸ், சிட்னி தண்டர், பிரைம் மினிஸ்டர் 11, ஆஸ்திரேலியா 11 ஆகிய அணிகளுக்காக முன்னதாக ஆடியுள்ளார். பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் இதுவரை இவருக்கு இடம்கிடைத்தது இல்லை.


இந்த தொடர் நிறைவடையும்போது இவர்கள் மீது ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியுமா? அல்லது பூர்த்தி செய்யப்படுமா? என்ற கேள்விககான விடை தெரியும்.