ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மலையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி - தனக்கோடி தம்பதியரின் மகன் கோவிந்தராஜ், 28. இவருக்கும் வசந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி பரமக்குடியில் ஒரு மண்டபத்தில் உறவுகள் புடைசூழ மேள தாளத்துடன் மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்துக்கு தயாராகி கொண்டிருந்தனர். மணவறையில் மணமகன் காத்திருக்க, உறவுக்காரப்பெண்கள் மணப்பெண்ணை அழைத்து வந்தனர். திருமண கனவில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை தாலியை எடுத்து கட்டப்போக, அந்த நேரத்தில் அங்கு வந்த போலீசார், சினிமாவில் வருவது போல, திருமணத்தை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த கல்யாண வீட்டுக்காரர்கள் காரணம் கேட்க, தாலிக்கட்டும் நேரத்தில் திடீரென்று மணப்பெண், ஹலோ போலீசுக்கு தொடர்பு கொண்டு, தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், தனக்கு மற்றொருவருடன் திருமணம் நடத்த உள்ளனர். எனவே மாப்பிள்ளை பிடிக்காததால் எனக்கு திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லை. எனது விருப்பம் இல்லாமல் நடக்கும் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு எங்களிடம் புகார் தெரிவித்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.மேலும், இதனால்தான், போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்று மணப்பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
'மாப்பிள்ளையின் பெற்றோர் காட்டிய அவசரத்தால் ஏற்பட்ட சிக்கல்'
இதனால் மணமகன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை ஒரு பெரிய அவமானமாக கருதினர். எனவே, உடனே அந்த மண்டபத்திலேயே அதே முகூர்த்தத்தில் வேறு பெண்ணின் கழுத்தில் தங்களது மகன் தாலி கட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அந்த இடத்திலேயே திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு உறவுக்காரப்பெண்ணை மணமகளாக தேர்வு செய்து திருமணத்தை நடத்த தயாராகி விட்டனர். ஆனால், அந்த பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத சிறுமி என, யாரோ சிலர்
இது பற்றி சைல்டு லைன், சமூகநலத்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தகவல் அறிந்ததும் அவர்கள் விரைந்து வந்து சிறுமியை அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்ககூடாது என்று நடைபெற இருந்த அந்த திருமணத்தையும். தடுத்து நிறுத்தி விட்டனர். அடுத்தடுத்த காரணங்களாலும், அடுத்தடுத்த திருப்பங்களாலும் திருமணம் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து திருமணத்தை நிறுத்திய 23 வயதான மணப்பெண்ணை போலீசார் அழைத்து சென்று ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இரண்டாவது மணப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட அந்த சிறுமியையும் பாதுகாப்பாக அழைத்து சென்று ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என்று பெற்றோரை அழைத்து விளக்கி கூறி எழுதி வாங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
'சினிமை மிஞ்சிய பரபரப்பு'
தாலி கட்டும் நேரத்தில் திடீரென திருமணத்தை நிறுத்தும் சம்பவங்கள் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு தனக்கு விருப்பம் இல்லாத ஒரு திருமணத்தை நடத்த உறவினர்கள் தயாரானதை தடுக்க மணப்பெண்ணே போலீசாருக்கு புகார் கொடுத்து தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவமும், அதனைத் தொடர்ந்து அவசரகதியில் சிறுமியை மணப்பெண்ணாக தேர்வு செய்த நிலையில் சமூக நலத் துறையினர் வந்து தடுத்ததும் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.