தஞ்சாவூரில் கொரோனா தொற்று இரண்டாவது அலைக்கு பிறகு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பார் வைத்திருக்ககூடாது, மீறி பார் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டிருந்தது. தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைக்கு அருகில் அனுமதியின்றி பாரும், அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.




தகவலையடுத்து, டாஸ்மாக் உதவி மேலாளர் சில்லரை விற்பனை வெங்கடேஸ்வரன் தலைமையில், உதவி மேலாளர் கணக்கு மகேந்திரன், ஊழியர்கள் சிவக்குமார்,தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், திடீரென சாந்தபிள்ளைகேட்-பூக்கார தெரு, பழைய பஸ் நிலையம்- மாட்டுமேஸ்திரி சந்து, மேலீஸ்கார்னர்-ரயில்வே கேட் அருகில், பஸ் நிலையம்-தனியார் லாட்ஜ் பின்புறம் ஆகிய நான்கு பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அக்கடைகளின் அருகில் பார் வைத்து, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அக்கடைகளின் அருகில் அனுமதியின்றி செயல்பட்ட பார்களை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.




இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தஞ்சாவூர், பூக்கார மண்ணையார் தெருவை சேர்ந்த செல்வக்குமார் (35), கூடலுார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜீவா(40), பாபநாசம் தாலுக்கா காவலுார் குடியானத்தெருவை சேர்ந்த மூர்த்தி (48), தஞ்சாவூர், வடக்கு வாசல்,கங்கா நகரை சேர்ந்த கோபி (46) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து,அவவ்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், பீர்களை பறிமுதல் செய்தனர்.


தஞ்சாவூர் நகர பகுதியான தற்காலிக பஸ் நிலையம் அருகிலுள்ள மூன்று கடைகள், கிழக்கு காவல் நிலையம் எதிர் சந்து, இரும்பு கடை அருகிலுள்ள டாஸ்மாக் கடை,பள்ளியக்கிரஹாரம் பைபாஸ் சாலையிலுள்ள இரண்டு கடைகள் என தஞ்சாவூரில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், இரவு 8 மணி முதல் காலை 10 மணி வரை மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து, பல முறை புகாரளித்தும், குறிப்பிட்ட கடைகளை மட்டும் கண்டு கொள்வதில்லை.




இக்கடைகள் இருக்கும் சாலை பிரதானமானதால், அரசியல்வாதிகள் முதல் அனைத்து அதிகாரிகளும் சென்று வரும் சாலையாகும். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் சென்று வருவது வேதனையான விஷயமாகும். குறிப்பிட்ட கடைகளில், கடந்த ஆட்சியிலும், தற்போதுள்ள ஆட்சியிலும்,  கூடுதல் விலைக்கு, மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க முடியாதது கேள்வி குறியாகியுள்ளது. எனவே, டாஸ்மாக் அதிகாரிகள், தஞ்சாவூர் நகரப்பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது குறித்து, திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.