சென்னை ராஜசேகரன் - வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்(வயது - 29). இவர் பிறந்தது முதலே  கை, கால்கள் செயல்படாது. மேலும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. செரிபரல் பால்ஸி என்ற நோயால் கஷ்டப்பட்டு வருகிறார். இவரால் முழுமையாக  பேசவோ, தானே தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. இருந்தபோதும், இவரது பெற்றோர் இவரை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் நான்கு வயது முதல் நீச்சல் பயிற்சி கொடுத்து வருகின்றனர். கடந்த 5 வருடத்திற்கு முன் தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர் (முதல்) புதுச்சேரி 5 கிலோ மீட்டர்தொலைவை கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக அவருக்கு மத்திய அரசின் சமூக நீதித்துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த முன்மாதிரி இளைஞர் என்ற தேசிய விருதை வழங்கியது. இவ்விருதை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.



2022-ம் ஆண்டு தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர் ( முதல்)  புதுச்சேரி 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்தார். அப்போதைய முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பாராட்டி பரிசு வழங்கினர். இதுவரை பல்வேறு போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர பாக் நீரிணை கடலை நீந்திக் கடக்க திட்டமிட்டு நேற்று  முன்தினம்  12-ம் தேதி மாலை 5 மணிக்கு தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கி, நேற்று 13-ம் தேதி தனுஷ்டியை அடைந்தார். நீந்துபவர்கள் கை, கால்களை அசைத்து ப்ரீ ஸ்டைல் முறையில் நீந்துவர். ஆனால், இவரால் கை, கால்களை அசைத்து நீந்த முடியாது என்பதால் நெஞ்சை அசைத்து ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் நீந்துவார். அதனால் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.



 

இது குறித்து ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸின் பெரியம்மா மனோரமா கூறுகையில்........,”மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக இருந்த போதும், அவரை மற்ற குழந்தைகளைப்போல் எதிலாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் நீச்சல் கற்றுக்கொடுக்க தொடங்கினோம். அவருக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டது. பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். `செரிபரல் பால்ஸி' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வளர்ப்பதே சிரமம். இவரைப் போன்று ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெற்றோர்களுக்கு இவர் ஓர் ஊக்குவிப்பாளராக இருப்பார். இவரைப்போன்ற குழந்தைகளை பெற்றோர் காப்பகங்களுக்கு அனுப்பாமல் தாங்களே பாதுகாத்து வளர்க்க வேண்டும். பாக்ஜலசந்தி கடலை சுமார் 32 கி.மீட்டர் இரவும் பகலும் நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளது பெருமையாக உள்ளது என்று கூறினார்.