உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணி, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அந்த நாட்டிலேயே கடந்த மாதம் முதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தை வரும் 20-ந் தேதி அந்த நாட்டின் கவுண்டி அணியினருடன் ஆட உள்ளனர். ரிஷப் பண்ட்டிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது அந்த இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக களமிறங்குவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




அணியின் தொடக்க வீரராக தற்போது உள்ள கே.எல்.ராகுல் மாற்று விக்கெட்கீப்பர் ஆவார். இருப்பினும் அவருக்கு இதற்கு முன்னதாக சிவப்பு நிற பந்தில் விக்கெட் கீப்பராக ஆடிய அனுபவம் கிடையாது.


இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமாகிய தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், அவர் தனது பேட், கையுறைகள், காலுறைகள், கீப்பிங் கிளவுஸ் அடங்கிய கிட் பேக்கின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த கிட் பேக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் மேலே” சும்மா சொல்றேன்” என்று பதிவிட்டு சிரிக்கும் பொம்மையையும் பதிவிட்டுள்ளார்.






 


ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அந்த இடத்திற்கு தான் பொருத்தமான வீரர் என்று தினேஷ் கார்த்திக் மறைமுகமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் நினைவூட்டியுள்ளார் என்று அவரது டுவிட்டருக்கு கீழ் பலரும் பதிவிட்டுள்ளனர்.




இந்தியா – நியூசிலாந்து மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போட்டி வர்ணணையாளராக தினேஷ் கார்த்திக் பணியாற்றினார். மேலும், அதற்கடுத்து நடைபெற்ற இங்கிலாந்து – இலங்கை ஒருநாள் தொடரிலும் தினேஷ் கார்த்திக் வர்ணணையாளராக பணியாற்றினார். தினேஷ் கார்த்திக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் இங்கிலாந்தில்தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 2 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 129 ரன்களை குவித்துள்ளார். மேலும், 94 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1752 ரன்களையும் குவித்துள்ளார். 32 டி20 போட்டிகளில் ஆடி 399 ரன்களை குவித்துள்ளார். 203 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 946 ரன்களை குவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.