இருளர் இனபெண் தன் மானத்தை காத்துகொள்ள நடந்த போராட்டத்தில் தப்பி ஓடும்போது கீழே விழுந்து இறந்த நபர் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.     


இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழுதிகைமேடு பகுதியில் ஒரு மீன் பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து கொண்டு இருந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த போது ஊர் பெயர் விலாசம் தெரியாத மற்றும் பேசும் மொழி புரியாத வேறு மாநிலத்தை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவரிடம் தவறாக நடக்க முயலும்போது தொலைவில் இருந்த தனது கணவரை துணைக்கு அழைத்துள்ளார்.


இருவரும் அந்த நபரிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அந்த நபரை அடித்து துரத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது. மேற்படி ஆண் நபர் தப்பி ஓடும் தருணத்தில் சிறிது தூரத்தில் தவறி விழுந்து அதே இடத்தில் இறந்துள்ளார். இறந்த நபரின் உடலில் சிறு காயங்கள் சந்தேகப்படும் வகையாக இருந்தது. மேற்படி இறந்து கிடந்த நபரை மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சந்திரசேகர் அவர்கள் 11.07.2021 அன்று இரவு ரோந்தின்போது, மீஞ்சூர் கல்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தபோது விசாரித்துள்ளார். விசாரணையின்போது, அவர் பேசிய மொழி புரியவில்லை, மேலும் அவரது உடலில் பல சிறு காயங்கள் காணப்பட்டுள்ளது. 




சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடம் சென்று இறந்த நபரின் உடலை கைப்பற்றி மீஞ்சூர் காவல் நிலைய குற்ற எண்.522/2021, ச/பி 174 கு.வி.மு.ச (சந்தேக மரணம்) என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண் ஒரு வழக்கறிஞருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஊர் பெயர் விலாசம் தெரியாத 30 வயது மதிக்கதக்க நபர் தன்னை கற்பழிக்க முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண்.16/2021, ச/பி. 376, 511 இ.த.ச.வில் கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் இருளர் இனத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததால், இவ்வழக்கின் சட்டப்பிரிவில் வன்கொடுமை தடுப்பு சட்டம் சேர்க்கப்பட்டது. (SC/ST Act)


மீஞ்சூர் காவல் நிலைய குற்ற எண் 522/2021 ச/பி 174 கு.வி.மு.ச (சந்தேக மரணம்) வழக்கில் இறந்த நபரின் மீது பிரேத பரிசோதனை முடித்து பிரேத விசாரணை அறிக்கை பெறவேண்டி விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இருளர் இனப்பெண் தன் மானத்தை காத்து கொள்ள நடந்த போராட்டத்தில் தப்பி ஓடும்போது கீழே விழுந்து இறந்த நபர் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கற்பழிப்பு முயற்சி தொடர்பாக பதியப்பட்ட வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளும் விசாரணையில் உள்ளது.


இவ்விரண்டு வழக்குகளிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், அரசு வழக்கறிஞரின் அறிவுரை மற்றும் கருத்துரு பெற்று மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் வாசிக்க: 


மயிலாடுதுறை: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெற்றோருக்கு கத்தி குத்து : மகன்களுடன் பாஜக பிரமுகர் கைது..! 


Rameswaram Murder: அரைகுறை ‛பாபநாசம்’ ஐடியா... 10 மாதத்திற்கு பின் கொலை வழக்கில் கைதான நண்பர்கள்!